இந்திய அரசியல் சாசன தினத்தன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளதாக தகவல்!


இந்திய அரசியல் சாசன தினத்தன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட உள்ளதாக தகவல்!
x

இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26ஆம் தேதி நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் சுமார் 24,000 சதுரமீட்டர் பரப்பளவு உடையது. அதாவது தற்போது உள்ள நாடாளுமன்ற கட்டடத்தை விட 17 ஆயிரம் சதுர மீட்டர் பெரிதாக அமைய உள்ளது.

நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனை தாங்கும் வகையிலும் மக்களவை மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் என 1,224 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அமரும் வகையில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட உள்ளது. டெல்லியில் எந்த ஒரு புதிய அரசு கட்டடமும் இந்தியா கேட்டை விட உயரமாக இருக்கக்கூடாது என்பதால் அதன் அடிப்படையில் நாடாளுமன்ற கட்டடம் அமைக்கப்பட்டு வருகிறது.

டாட்டா குழுமம் இந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை அடிப்படையாகக் கொண்ட ஹச்.பி.சி என்னும் வடிவமைப்பு நிறுவனம் இந்த நாடாளுமன்ற புதிய கட்டடத்திற்கான வடிவமைப்பை செய்து கொடுத்துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் பொழுது நிறைவடைந்து இருக்கும் என்றும், அதன் பிறகு வரக்கூடிய கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில்தான் நடத்தப்படும் எனவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமான பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஆய்வு நடத்திவரும் மத்திய அரசு, வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்துவிட ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

திட்டமிட்டப்படி பணிகள் அனைத்தும் நிறைவடைந்து இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினமான வரும் நவம்பர் 26 ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்பட்டு, வரும் குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டடத்தில் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.


Next Story