வாகனங்களில் பதிவெண் பொருத்தும் முறை ஒழுங்குபடுத்தப்படுமா?; வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு


வாகனங்களில் பதிவெண் பொருத்தும் முறை ஒழுங்குபடுத்தப்படுமா?; வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
x

வாகனங்களில் பதிவெண் பொருத்தும் முறை ஒழுங்குபடுத்தப்படுமா? என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பெங்களூரு:

அபராதம் விதிக்கும் போலீசார்

கர்நாடக தலைநகராக பெங்களூரு விளங்கி வருகிறது. பெங்களூருவில் ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் அண்டை மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் பெங்களூருவிலேயே தங்கி உள்ளனர். மேலும் அலுவலகம் சென்று வருவதற்கு வசதியாக கார், இருசக்கர வாகனங்களையும் வாங்கி உள்ளனர்.

இவர்களை தவிர பெங்களூருவில் வேறு தொழில், வேலைகள் செய்பவர்களும் அலுவலகம் செல்ல வசதியாக இருசக்கர வாகனங்கள், கார்கள் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் சாலைகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் சரியாக அணியவில்லை, காப்பீடு இல்லை என்று பல்வேறு காரணங்களை கூறி அபராதம் வசூலித்து வருகின்றனர்.

சரியாக தெரிவது இல்லை

கார்களில் செல்பவர்களிடம் சீட் பெல்ட் சரியாக அணியவில்லை என்று கூறி அபராதம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து போலீசார் மீது வாகன ஓட்டிகள் மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர். அதாவது கார்கள், இருசக்கர வாகனங்களில் வாகன பதிவெண் சரியாக இல்லை என்று கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பதாக கூறி வருகின்றனர்.

அதாவது ஸ்டிக்கரில் ஒட்டப்படும் வாகன பதிவெண் சரியாக தெரிவது இல்லை என்று போலீசார் கூறுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் வாகன பதிவெண் பொருத்தும் முறையை வட்டார போக்குவரத்து துறை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:-

அபராதம் செலுத்தினேன்

எலகங்கா அருகே நாகேனஹள்ளியில் வசித்து வரும் பிரதாப் என்பவர் கூறுகையில், 'ஒருமுறை நான் காரில் எலகங்கா சென்று கொண்டு இருந்தேன். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் எனது காரை நிறுத்தினர். என்னிடம் உங்கள் கார் வாகன பதிவெண் சரியாக தெரியவில்லை. இதனால் அபராதம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று கூறினர். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐ.எம்.டி. ரக வாகன பதிவெண்ணை பயன்படுத்த வேண்டும் என்று போலீசார் கூறினர். ஆனால் எனக்கு இதுபற்றி தெரியாது என்று கூறினேன். ஆனாலும் என்னிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து விட்டனர். வேறு வழியின்றி நானும் அபராதம் செலுத்தினேன். பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு வாகன பதிவெண் பற்றி சரியாக தெரிவது இல்லை. இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும்' என்றார்.

ஒழுங்குபடுத்த வேண்டும்

ராபிடோவில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் நரேஷ் என்பவர் கூறியதாவது, 'ராபிடோவில் இருசக்கர வாகனம் ஓட்டும் நான் தினமும் 100 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறேன். நிறைய இடங்களில் போக்குவரத்து போலீசார் எனது இருசக்கர வாகனத்தை வழிமறித்து வாகன பதிவெண் சரியாக இல்லை என்று கூறி அபராதம் வசூலித்து உள்ளனர். நானும் வேறு வழியில்லாமல் அபராதம் செலுத்தி வந்து உள்ளேன். பிழைப்புக்காக நான் ராபிடோவில் இருசக்கர வாகனம் ஓட்டுகிறேன். வாகன பதிவெண் சரியாக இல்லை என்று எல்லாம் அபராதம் வசூலித்தால் நான் என்ன செய்வது?' என்று கூறினார்.

சென்னஹள்ளியில் வசித்து வரும் கவாஸ் என்பவர் கூறும்போது, 'இருசக்கர வாகனங்களை ஷோரூம்களில் இருந்து வாங்கும்போது ஷோரூம் ஊழியர்கள் தான் வாகன பதிவெண்ணை தேர்வு செய்து தருகிறார்கள். வாகன பதிவெண் பொருத்த செல்லும் போது கூட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எந்த வாகன பதிவெண்ணை பொருத்த வேண்டும் என்று யாரும் கூறுவது இல்லை. இப்படி இருக்கும் போது வாகன பதிவெண் சரியாக இல்லை என்று கூறி போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பது சரியல்ல. வாகன பதிவெண் பொருத்தும் முறையை ஒழுங்குபடுத்த வேண்டும்' என்றார்.

போக்குவரத்து போலீசார் கூறுவது என்ன?

வாகன பதிவெண் குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:-

வாகன பதிவெண்ணை ஸ்டிக்கரில் ஒட்டுகிறார்கள். அந்த ஸ்டிக்கர் கிழிந்தாலும் அதை மாற்ற வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. தூரத்தில் இருந்து பார்க்கும் போது வாகன பதிவெண் சரியாக தெரிவது இல்லை. வாகன பதிவெண் சரியாக இல்லாவிட்டால் அதுவும் போக்குவரத்து விதிகளை மீறுவது தான். வாகன பதிவெண் தெளிவாக தெரியும்படி வாகன ஓட்டிகள் பொருத்தி இருந்தால் நாங்கள் எதற்காக அபராதம் விதிக்க போகிறோம். போக்குவரத்து விதிகளை மதித்து வாகன ஓட்டிகள் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினர்.


Next Story