பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் - ராகுல்காந்தி


பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் - ராகுல்காந்தி
x

பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகள் என இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அங்கு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி தனது சொந்த ஊரில் இன்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். நான் உருவாக்கிய குஜராத்' என்று முழக்கத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் 300 யூனிட் இலவச மின்சாரம், மாதம் 3 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், அங்கு தொடர்ந்து சுற்றுபயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து குஜராத் மக்களை காப்பாற்றுவோம் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பாஜகவின் இரட்டை என்ஜின் என்ற வஞ்சகத்தில் இருந்து உங்களை காப்பாற்றுவோம். மாற்றத்திற்கான திருவிழாவை குஜராத்தில் கொண்டாடுவோம். எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள், ரூ. 3 லட்சம் வரையிலான விவசாயக்கடன்கள் தள்ளுபடி போன்ற காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.


Next Story