உலகின் முதல் 3 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை கொண்டு செல்வேன்: பிரதமர் மோடி
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
போபால்,
மத்தியபிரதேச மாநிலத்தில் 230 உறுப்பினர்களை கொண்ட சட்டசபைக்கு வரும் 17ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 3ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மத்தியபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, ஆட்சியை தக்கவைக்க பாஜகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக, தான் பதவியேற்றால், உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை முன்னேற்றி கொண்டு செல்வேன் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதுதொடர்பாக மத்தியப் பிரதேசத்தின் தாமோ நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். சத்தீஸ்கார் மற்றும் ராஜஸ்தானில் மக்கள் காங்கிரசுக்கு ஆட்சியைக் கொடுத்தனர், ஆனால் அவர்களின் முதல்-மந்திரிகள் "சட்டா" (பந்தயம்) மற்றும் கருப்புப் பணத்தை உருவாக்கி வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது நாட்டின் பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்தது. படிப்படியாக அது 9, 8, 7 மற்றும் 6 வது இடத்திற்கு மாறியது, ஆனால் யாரும் அதைப் பற்றி பேசவில்லை. 200 ஆண்டுகள் நாட்டை ஆண்ட இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தைப் பிடித்ததும், அனைவரும் ஆச்சரியப்பட்டு இந்தியாவை பார்க்கத் தொடங்கினர்,'' என்றார்.
மூன்றாவது முறை பிரதமராக பதவியேற்கும்போது, நாட்டின் பொருளாதாரத்தை உலகின் முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு செல்வேன்" என்று பிரதமர் மோடி கூறினார்.
அடுத்த ஆண்டு நாடளுமன்றதேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அக்கட்சியின் தலைவர் கூறியது போல் மாநிலங்களில் 85 சதவீத கமிஷன் முறை செயல்படும்" என்று பிரதமர் மோடி கூறினார்.