மத்திய அரசு குறைத்துள்ளதுபோல் கர்நாடகத்திலும் பெட்ரோல் மீதான வரி குறைப்பா?-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்


மத்திய அரசு குறைத்துள்ளதுபோல் கர்நாடகத்திலும் பெட்ரோல் மீதான வரி குறைப்பா?-முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில்
x

மத்திய அரசு குறைத்துள்ளதுபோல் கர்நாடக அரசும் பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைக்க திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு: மத்திய அரசு குறைத்துள்ளதுபோல் கர்நாடக அரசும் பெட்ரோல் - டீசல் மீதான வரியை குறைக்க திட்டமிட்டுள்ளதா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார்.

பசவராஜ் பொம்மை பயணம்

சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் பொருளாதார மாநாடு இன்று(திங்கட்கிழமை) நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக உயர்கல்வி மற்றும் தகவல்-உயிரி தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் ஏற்கனவே லண்டன் சென்று, பின்னர் அங்கிருந்து தாவோஸ் சென்றுவிட்டார். இந்த நிலையில் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை 5 நாட்கள் அரசுமுறை பயணமாக நேற்று சுவிட்சர்லாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

நேற்று காலை 10.35 மணிக்கு பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று, பின்னர் அங்கிருந்து சுவிட்சர்லாந்துக்கு சென்றார். அவரை மந்திரிகள் கோபாலய்யா, முனிரத்னா, பைரதி பசவராஜ், சி.சி.பட்டீல் மற்றும் உயர் அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். சுவிட்சர்லாந்து புறப்படுவதற்கு முன்பு பசவராஜ் பொம்மை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முதலீட்டாளர்கள் மாநாடு

நான் இன்று (நேற்று) சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகருக்கு புறப்பட்டு செல்கிறேன். அங்கு நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்கிறேன். பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேசுகிறேன். அவர்கள் கர்நாடகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளனர். முதலீடுகளை ஈர்க்க நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதிக முதலீடுகளை ஈர்ப்போம்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற நவம்பர் மாதம் கர்நாடகத்தில் நடக்கிறது. இதுகுறித்து தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்த இருக்கிறேன். பல்வேறு தொழில் ஒப்பந்தங்கள் போடப்படும். இந்த ஒப்பந்தங்கள் அத்துடன் முடிவடைந்துவிடாது. கர்நாடகத்தில் அந்த நிறுவனங்கள் தொழில் தொடங்குவதை உறுதி செய்வேன்.

பெட்ரோல் மீதான வரி

நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை கடுமையாக உயர்ந்ததை அடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. அதாவது பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசலில் லிட்டருக்கு ரூ.7-ம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரியை குறைக்குமா? என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளன.

பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு முன்பு குறைத்தது. அப்போது கர்நாடக அரசும் விற்பனை வரியை குறைத்தது. மத்திய அரசு இப்போது மீண்டும் வரியை குறைத்துள்ளது. அதே போல் கர்நாடக அரசும் தனது வரியை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. நிதித்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பிறகு விற்பனை வரியை குறைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

அவருடன் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி உள்பட உயர் அதிகாரிகள் சென்றனர்.

மேலும் குறைய வாய்ப்பு

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுபோல் கர்நாடகத்திலும் பெட்ரோல் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதால் அது மக்களுக்கு இன்னும் இனிப்பான செய்தியாக அமைந்திருக்கிறது.

பெட்ரோல்-டீசல் விலையை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில் நேற்று பெங்களூருவில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.101.92-க்கும், டீசல் ஒரு லிட்டர் 87.89-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.111.09-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.79-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசு போல், கர்நாடக மாநில அரசும் பெட்ரோல்-டீசல் மீதான வரியை குறைத்தால் அவற்றின் விலை மேலும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story