காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் 'ரிமோட்' மூலம் இயக்கப்படுவாரா?; ராகுல் காந்தி பதில்
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுகிறவர், சோனியா குடும்பத்தினரால் ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படுவார் என்று எழுந்துள்ள விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார்.
பெங்களூரு:
காங்கிரஸ் பாதயாத்திரை
கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி உள்ளார். தமிழகம், கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.
கர்நாடகத்தில் 7-வது நாளான நேற்று ஆதிசுஞ்சனகிரி மடத்தில் இருந்து ராகுல்காந்தி காலை 7 மணிக்கு பாதயாத்திரையை தொடங்கினார். பின்னர் துமகூரு மாவட்டத்துக்குள் நுழைந்த பாதயாத்திரைக்கு துமகூரு மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 11 மணி அளவில் ஹொட்டனகட்டி கிராமத்தில் ராகுல்காந்தி ஓய்வெடுத்தார். அப்போது அந்தப்ழுகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராஜேஷ் என்பவரின் வீட்டில் உணவு சாப்பிட்டார். இதையடுத்து அங்கிருந்து மாலை 4 மணி அளவில் மீண்டும் பாதயாத்திரையை ராகுல்காந்தி தொடர்ந்தார்.
'பாதயாத்திரையில் தனித்து இல்லை'
உற்சாகமாக நடந்த அவருடன் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள், மக்களும் சேர்ந்து நடந்து வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டு பாதயாத்திரையை வரவேற்று கரகோஷம் எழுப்பினர். நேற்று இரவு 7 மணி துருவகெரே அருகே ஹரிதாசனஹள்ளி பகுதியில் ராகுல்காந்தி பாதயாத்திரையை நிறைவு செய்தார். அந்தப்பகுதியில் இரவு அவர் ஓய்வெடுத்தார்.
முன்னதாக துருவகெரேயில் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த இந்திய ஒற்றுமை பாதயாத்திரையில் நான் தனியாக இல்லை. இதில், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமத்துமின்மை ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள லட்சோப லட்சம் மக்கள் சேர்ந்திருக்கிறார்கள்.
'ரிமோட்' மூலம் இயக்கப்படுவாரா?
காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தலைவர் ஆகிறவர், சோனியா காந்தி குடும்பத்தினால் 'ரிமோட்' மூலம் இயக்கப்படுவார் என்று ஒரு கருத்து எழுந்து இருக்கிறதே என கேட்கிறீர்கள்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிற இருவருமே ஒரு நிலையில் இருப்பவர்கள், அவர்களுக்கென்று ஒரு கண்ணோட்டம் இருக்கிறது, அவர்கள் உயர்வானவர்கள், புரிதல் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் 'ரிமோட்' கட்டுப்பாட்டில் இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. ஆனால் வெளிப்படையாக இந்த விமர்சன தொனி, அவர்கள் இருவரையும் அவமதிக்கிறது.
வெறுப்புணர்வு, வன்முறை
வெறுப்புணர்வையும், வன்முறையையும் பரப்புவது தேசவிரோத செயல். இதில் ஈடுபடுகிறவர்கள் யாராக இருந்தாலும், நாங்கள் எதிர்த்துப் போராடுவோம்.
புதிய கல்விக்கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். ஏனென்றால் அது நமது வரலாற்றை, மரபுகளை சிதைக்கிறது. பரவலாக்கப்பட்ட கல்வி முறையைத்தான் நாங்கள் விரும்புகிறோம். இந்த பாதயாத்திரை 2024-ம் ஆண்டு நடக்க உள்ள தேர்தலுக்காக அல்ல. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். நாட்டை பிரிப்பதற்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் விரும்புகிறது.
கர்நாடகத்தில் காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளர்கள் யார் என்று கேட்கிறீர்கள். முதல்-மந்திரி வேட்பாளரை தற்போதே அறிவிக்கும் எண்ணம் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு அதுபற்றி முடிவு எடுக்கப்படும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு கர்நாடகத்தில் ஆட்சியை பிடிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளோம். முதல்-மந்திரி பதவிக்கு யாரும் போட்டியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ராஜஸ்தானில் அதானி முதலீடு
காங்கிரஸ் ஆட்சி நடக்கிற ராஜஸ்தான் மாநிலத்தில், கவுதம் அதானி ரூ.65 ஆயிரம் கோடி முதலீடுகளை செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவருடன் அந்த மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் மேடையை பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுபற்றி ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார். அப்போது அவர், "ராஜஸ்தானில் கவுதம் அதானிக்கு உதவுவதற்கு, பா.ஜ.க.வை போல அசோக் கெலாட் அரசு தனது அரசியல் சக்தியை பயன்படுத்தவில்லை. அதை ராஜஸ்தான் அரசு செய்கிற நாளில் நான் அதை எதிர்த்து நிற்பேன்" என தெரிவித்தார்.