2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை


2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று பெண் தற்கொலை
x

ராமநகர் அருகே குடும்ப பிரச்சினையில் பெண் ஒருவர் உணவில் விஷம் கலந்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் தானும் அதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநகர்:

விவசாயி

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஹொசபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ரூபா(வயது 30). விவசாயியான லோகேஷ், மாகடி தாலுகாவின் விவசாய சங்க தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்களுக்கு ஹர்ஷிதா(6), ஸ்பூர்தி(4) என 2 மகள்கள் இருந்தனர். இந்த நிலையில் ரூபாவுக்கும், லோகேசுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று காலையிலும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து லோகேஷ் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டார்.

தற்கொலை

குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த ரூபா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்துவிட்டால் தனது குழந்தைகளின் நிலைமை என்னவாகும் என்று கருதிய அவர் குழந்தைகளையும் கொன்றுவிட முடிவு செய்தார். அதன்படி உணவில் பூச்சிக்கொல்லி மருந்து(விஷம்) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, பின்னர் தானும் அந்த உணவை சாப்பிட்டுவிட்டார்.

இதில் விஷம் தலைக்கேறிய நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 3 பேரும் வீட்டிலேயே பரிதாபமாக இறந்து போனார்கள். இந்த நிலையில் வீடு திரும்பிய லோகேஷ், குழந்தைகள் மற்றும் மனைவி பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சோகம்

பின்னர் அவர் இதுபற்றி மாகடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபா மற்றும் அவரது குழந்தைகள் என 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். குடும்ப பிரச்சினையில் மகள்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story