செல்லப்பிராணி நாய் குரைத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் - பெண் பலி
செல்லப்பிராணி நாய் குரைத்ததால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம் கிஹர்பூர் கிராமத்தை சேர்ந்த பெண் லால் முனியா (வயது 50). இவரது அண்டை வீட்டு நபர் செல்லப்பிராணி நாய் வளர்த்து வந்துள்ளார்.
இதனிடையே, லால் முனியா நேற்று இரவு தனது வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, தெருவில் இருந்த செல்லப்பிராணி நாய் லால் முனியாவை பார்த்து குறைத்தது. பின்னர், அவரை கடிக்கவும் செய்தது.
இதனால், செல்லப்பிராணி நாய் குரைத்தது, கடித்தது தொடர்பாக அதன் உரிமையாளரிடம் லால் முனியா அவரது குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பு மோதலாக மாறியது. லால் முனியாவின் குடும்பத்தினரும், அண்டை வீடு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் லால் முனியா உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர். 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லால் முனியாலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக லால் முனியாவின் மகன் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அண்டை வீட்டாரான சிவசாகர் பிந்த், அவரது மகன் அஜித் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக ஒரு நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.