குழந்தையை மருத்துவமனை 3-வது மாடியில் இருந்து கீழே வீசி கொன்று நாடகமாடிய கொடூர தாய்


குழந்தையை மருத்துவமனை 3-வது மாடியில் இருந்து கீழே வீசி கொன்று நாடகமாடிய கொடூர தாய்
x

பிறந்து 3 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தையை மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து கீழே வீசி தாய் கொன்றார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் பெட்லெட் பகுதியை சேர்ந்தவர் ஆசிப். இவரது மனைவி பெர்சானாபானு மலிக் (வயது 23). பெர்சானாபானுவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை உடல்நலம் குன்றிய நிலையில் இருந்ததால் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், பெர்சானாபானு தனது குழந்தை அம்ரீன்பானு உடன் வீட்டிற்கு சென்றார்.

இதனிடையே, குழந்தை அம்ரீன்பானுவுக்கு கடந்த டிசம்பர் 14-ம் தேதி மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நடீட் நகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. ஆனால், குழந்தையின் உடல்நலம் தொடர்து மோசமடைந்ததால் அகமதாபாத்தின் அசர்வா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது மகள் அம்ரீன்பானுவை நேற்று மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து கீழே வீசி பெர்சானாபானு மலிக் கொலை செய்தார். பின்னர், தனது மகளை காணவில்லை என்று அவர் நாடகமாடியுள்ளார்.

ஆனால், மருத்துவமனையில் பின்புறம் 3 மாத குழந்தை பிணமாக கிடந்ததை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மருத்துவமனைக்க்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெர்சானாபானு தனது மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் 3-வது மாடிக்கு செல்வதும் பின்னர் அவர் மட்டும் தனியே வருவதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.

அந்த காட்சியின் அடிப்படையில் பெர்சானா பானுவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் தனது குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதால் அதை மருத்துவமனையில் இருந்து கீழே வீசி கொன்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, குழந்தையை கொன்ற பெர்சானாவை போலீசார் கைது செய்தனர்.


Next Story