55 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் மூதாட்டிக்கு குடியுரிமை வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு! வினோத சம்பவம்


55 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் மூதாட்டிக்கு குடியுரிமை வழங்க கோரி ஐகோர்ட்டில் மனு! வினோத சம்பவம்
x

55 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணி, குடியுரிமை கோரி கோர்ட்டை நாடியுள்ளார்.

மும்பை,

55 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் ஒரு பெண்மணி, இந்திய நாட்டின் குடியுரிமை கோரி மும்பை ஐகோர்ட்டை நாடியுள்ளார். இந்த வினோத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலா போபட்(66 வயது ), கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியுரிமை ஆவணங்கள் மற்றும் இந்திய பாஸ்போர்ட் ஆகியவை இல்லாமல் இந்தியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனக்கு குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மும்பை ஐகோர்ட்டை அணுகியுள்ளார்.

நீதிபதி எஸ்.வி.கங்கபூர்வாலா தலைமையிலான அமர்வு முன் தாக்கல் செய்த மனுவில், 'நான் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள உகாண்டாவில் பிறந்து, 1956 ஆம் ஆண்டு எனக்கு பத்து வயதாக இருந்தபோது எனது தாயின் இந்திய பாஸ்போர்ட்டில் இந்தியா வந்தேன்.

அதன்பின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியரை நான் திருமணம் செய்துகொண்டேன். இப்போது இரண்டு குழந்தைகள் மற்றும் பல பேரக்குழந்தைகள் எனக்கு உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்திய குடிமக்கள்.

இதற்கிடையே, இந்த ஆண்டுகளில் நான் இந்திய பாஸ்போர்ட்டுக்கு மூன்று முறை விண்ணப்பித்தேன். ஆனால் ஆவணங்கள் இல்லாததால் ஒவ்வொரு முறையும் எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் தான், இந்திய பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு முன் முதலில் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளால் கூறப்பட்டது.

அதன்படி, 2019 ஆம் ஆண்டில், மனுதாரர் ஆன்லைனில் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். ஆனால் அது அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய அரசின் வழக்கறிஞர் அத்வைத் சேத்னா கூறுகையில், 'போபட் தனது பிறப்புச் சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே குடியுரிமை வழங்க முடியும்.

அவர் தனது பூர்வீகம் மற்றும் அவர் எப்படி இந்தியாவிற்கு வந்தார் என்பதை நிரூபிக்கும் வேறு ஏதேனும் ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே குடியுரிமை வழங்க முடியும். மனுதாரர் உகாண்டாவில் உள்ள தூதரகத்தை அணுகி அவர்களிடமிருந்து தேவையான ஆவணங்களைப் பெறலாம்' என்று கூறினார்.

இந்த மனுவை ஆகஸ்ட் 22ம் தேதி கோர்ட்டு விசாரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story