பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை நடுரோட்டில் புரட்டி எடுத்த பெண் பயணி...!


பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை நடுரோட்டில் புரட்டி எடுத்த பெண் பயணி...!
x

பஸ்சில் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த நபரை பெண் பயணி நடுரோட்டில் புரட்டி எடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் பனமாரம் பகுதியை சேர்ந்த சந்தியா கடந்த ஞாயிற்றுக்கிழமை வெங்கப்பள்ளி நோக்கி செல்லும் பஸ்சில் பயணித்தார். அப்போது, படிஞ்சராதரா என்ற நிறுத்தத்தில் மது போதையில் பூவாழன் என்ற நபர் பஸ்சில் ஏறினார்.

மது போதையில் இருந்த பூவாழன் சந்தியா அமர்ந்திருந்த இருக்கையில் அமர்ந்தார். பஸ் சென்றுகொண்டிருந்த சிறிது நேரத்தில் சந்தியாவுக்கு மதுபோதையில் இருந்த பூவாழன் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சந்தியா வேறு இருக்கைக்கு சென்று அமருமாறு பூவாழனிடம் கூறினார். ஆனால், பூவாழன் தான் அமர்ந்திருந்த இருக்கையை விட்டு எழுந்து செல்லாமல் அதிலேயே தொடர்ந்து அமர்ந்துகொண்டு சந்தியாவுக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார்.

இதை கவனித்த மற்றொரு பெண் பயணி இது குறித்து நடத்துனரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சக பயணிகள் மற்றும் நடத்துனர் அனைவரும் வேறு இருக்கையில் அமரும்படி கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பூவாழன் சந்தியாவை தகாத வார்த்தையால் திட்டிவிட்டு பஸ்சில் இருந்து கீழே இறங்கி மதுபோதையில் பஸ்சின் முன் நின்று தகராறு செய்துள்ளார். பின் பஸ்சுக்குள் ஏறிய பூவாழன் சந்தியாவின் கன்னத்தில் அடித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த சந்தியா மதுபோதையில் இருந்த பூவாழனை நின்றுகொண்டிருந்த பஸ்சில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதில், பூவாழன் சாலையில் விழுந்தார்.

பின்னர் பஸ்சில் இருந்து கீழே இறங்கிய சந்தியா தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்ட பூவாழனை அடித்து உதைத்து நடுரோட்டில் புரட்டி எடுத்தார். மதுபோதையில் பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்த பூவாழனை சந்தியா நடுரோட்டில் துவைத்து எடுத்ததை அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், துணிச்சலாக செயல்பட்ட பெண் பயணி சந்தியாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.Next Story