பெண் நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: 15 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு


பெண் நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு: 15 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
x
தினத்தந்தி 19 Oct 2023 2:00 AM GMT (Updated: 19 Oct 2023 7:33 AM GMT)

டெல்லியில் பெண் நிருபர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 15 ஆண்டுகளுக்குப் பின் 5 பேர் குற்றவாளிகள் என டெல்லி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியைச் சேர்ந்த, கேரளாவை பூர்வீகமாக கொண்ட விஸ்வநாதன்-மாதவி தம்பதியின் ஒரே மகள் சவும்யா விஸ்வநாதன் (வயது 25). இவர் ஒரு பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வந்தார். சவும்யா கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி அதிகாலையில் பணி முடிந்து, வீட்டுக்கு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது சவும்யாவின் காரை மறித்த சிலர், அவரிடம் வழிப்பறி செய்ய முயன்றனர். தப்பிச் செல்ல முற்பட்ட சவும்யாவின் நெற்றியில் சுட்டுக் கொன்றுவிட்டனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் 2009-ம் ஆண்டு மற்றொரு கால் சென்டர் ஊழியரை சுட்டுக் கொன்றவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஏற்கனவே சவும்யாவை சுட்டுக் கொன்றதை தெரிவித்தனர்.

அதன் அடிப்படையில், ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் சேத்தி, அஜய் குமார் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 2009-ம் ஆண்டே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலும், சாட்சியங்கள் ஆஜராகாதது போன்ற பல்வேறு காரணங்களால் இந்த வழக்கு விசாரணை மந்தகதியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் குற்றவாளிகள் என டெல்லி கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ரவீந்திரகுமார் பாண்டே நேற்று தீர்ப்பு அளித்தார். அவர்களில் ரவி கபூர், அமித் சுக்லா, பல்ஜீத் மாலிக், அஜய் குமார் ஆகியோர் மீது கொலைக் குற்றமும், அஜய் சேத்தி மீது கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார். அவர்கள் 5 பேருக்கான தண்டனை விவரங்கள் வருகிற 26-ந் தேதி அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ள 5 பேரில் மூவர், ஏற்கனவே கால் சென்டர் ஊழியர் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ளவர்கள் ஆவார்கள். அவர்களில் ரவி கபூர், அமித் சுக்லா ஆகியோருக்கு விசாரணை கோர்ட்டில் தூக்கு தண்டனையும், பல்ஜீத் மாலிக்குக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டன.

பிற்பாடு ரவி கபூர், அமித் சுக்லாவுக்கான தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக டெல்லி ஐகோர்ட்டு குறைத்தது. அதேவேளையில் பல்ஜீத் மாலிக்கின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.


Next Story