நடத்தையில் சந்தேகத்தால் துப்பாக்கியால் சுட்டு பெண் கொலை; கணவர் வெறிச்செயல்
குஷால்நகரில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
குடகு:
நடத்தையில் சந்தேகம்
குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகா செட்டள்ளி பகுதியை சேர்ந்தவர் கோபால்(வயது 43). இவரது மனைவி செஷ்மா (34). இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளது. அவள், பெங்களூருவில் உள்ள சித்தி வீட்டில் தங்கியிருந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். கணவன், மனைவி மட்டும் இங்கு வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோபால், மனைவி செஷ்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலையும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த கோபால், மனைவி என்றும் பாராமல் செஷ்மாவை வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டார்.
இதில் துப்பாக்கி குண்டு, செஷ்மாவின் நெஞ்சுபகுதியை துளைத்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கைது
இதையடுத்து கோபால், பெங்களூருவில் உள்ள மகள் மற்றும் குடகில் இருந்த உறவினர்களிடம் செஷ்மா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அளித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் விரைந்து ஓடி வந்து, செஷ்மாவின் உடலை பார்த்து கதறி அழுத்தனர். மேலும் செஷ்மா தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. கணவன்தான் கொலை செய்திருக்கிறார் என்று கூறி, மடிகேரி போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கோபால், செஷ்மாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், கோபாலை கைது செய்தனர். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.