பத்ராவதியில் கழுத்தை நெரித்து பெண் கொலை


பத்ராவதியில்  கழுத்தை நெரித்து பெண் கொலை
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:47 PM GMT)

பத்ராவதி டவுனில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா-

பத்ராவதி டவுனில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கூலி வேலை

சித்ரதுர்கா மாவட்டம் பர்மசாகரா பகுதியை சேர்ந்தவர் ரூபா (வயது30). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் வேலை தேடி ரூபா சிவமொக்கா மாவட்டம் பத்ராவதிக்கு சென்றார். இந்தநிலையில் அங்கு ரூபா கூலி வேலை செய்து வந்தார். அப்போது அவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த அனுமந்தா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் 2 பேரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர்.

இதனால் அவர்களிடம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அனுமந்தா, ரூபா ஆகிய 2 பேரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர். இதையடுத்து அனுமந்தா, நாம் 2 பேரும் சேர்ந்து வாழலாம் என ரூபாவிடம் கூறினார். இதற்கு ரூபாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் அப்பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

குடும்ப தகராறு

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக அனுமந்தா, ரூபா இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று அனுமந்தா இரவு மதுகுடித்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும் ரூபாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ரூபாவை அனுமந்தா தாக்கினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். பின்னர், அவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இதையடுத்து அனுமந்தா அங்கிருந்து சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு அனுமந்தா வந்தார். அப்போது ரூபாவை, அனுமந்தா கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.

சிறையில் அடைத்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்த பத்ராவதி புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பத்ராவதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அனுமந்தாைவ போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் பத்ராவதி பகுதியில் பதுங்கி இருந்த அனுமந்தாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். பத்ராவதி பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story