தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை


தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 8 Oct 2023 6:45 PM GMT (Updated: 8 Oct 2023 6:45 PM GMT)

மந்திரி கே.எச்.முனியப்பாவின் தோட்டத்தில் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோலார் தங்கவயல்

கர்நாடக மாநிலம் உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரியாக பொறுப்பு வகித்து வருபவர் கே.எச்.முனியப்பா. சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா கம்பதஹள்ளி கிராமத்தில் இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தில் மல்லூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 45) என்பவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல தோட்டத்திற்கு வேலைக்கு சென்றவர், வெகுநேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜின் மனைவி சாந்தம்மா தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு நாகராஜ் இறந்துகிடந்தார். அவரது உடல் அருகே விஷ பாட்டில் கிடந்தது. இதனால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பதை அறிந்த சாந்தம்மா உடனே இதுகுறித்து சிட்லகட்டா புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிட்லகட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த சிட்லகட்டா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story