பெங்களூருவுக்கு வந்த உலகின் மிகப்பெரிய விமானம்!


பெங்களூருவுக்கு வந்த உலகின் மிகப்பெரிய விமானம்!
x

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் முதல் முறையாக பெங்களூரு வந்தது. அந்த விமானத்திற்கு இங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெங்களூரு:

மிகப்பெரிய விமானம்

உலகின் மிகப்பெரிய வணிக ரீதியிலான பயணிகள் விமானம் இ.கே.562 வகையை சேர்ந்தது. இது எமிரெட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ380 ஆகும். இது இரண்டு அடுக்கு வசதியை கொண்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. அரண்மனையை போல் அனைத்து சொகுசு வசதிகளும் அந்த விமானத்தில் உள்ளன. அந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பெங்களூருவுக்கு வருகிற 30-ந் தேதி முதல் அந்த விமான போக்குவரத்தை தொடங்க முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே, அந்த விமானத்தின் சேவை 14-ந் தேதி (நேற்று) முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி அந்த மிகப்பெரிய விமானம் துபாய்-பெங்களூரு இடையே போக்குவரத்தை தொடங்கியுள்ளது. அந்த விமானம் முதல் முறையாக நேற்று துபாயில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மாலை 3.40 மணிக்கு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. அந்த விமானத்தை கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் தூதர் அகமது அப்துல் ரகுமான் அல்பென்னா, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாக இயக்குனர் ஹரி மரார் மற்றும் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அந்த விமானத்தில் 224 பயணிகள் பயணம் செய்து பெங்களூரு வந்தனர்.

தென்இந்தியாவில் முதல் முறையாக...

விமான நிலைய ஊழியர்கள் அந்த விமானத்தை உற்சாகமாக வரவேற்றனர். இந்த விமான போக்குவரத்து மூலம் பெரிய ரக விமானங்களும் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் மீண்டும் மாலை 6.40 மணிக்கு துபாய் புறப்பட்டு சென்றது. உள்ளூர் நேரப்படி இரவு 9 மணிக்கு துபாயை சென்றடைந்தது.

இந்தியாவில் டெல்லி, மும்பை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய 4 விமான நிலையங்களில் மட்டுமே ஏர்பஸ் ஏ380 ரக விமானங்களை கையாளும் திறன் உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே டெல்லி, மும்பைக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில் 3-வதாக தென்இந்தியாவில் முதல் முறையாக பெங்களூருவுக்கு அந்த பெரிய விமானம் வந்து சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த விமானத்தில் எகானமி, பிசினஸ் மற்றும் முதல் வகுப்பு வசதி உள்ளது. எகானமி வகுப்பில் இருக்கைகள் அகலமாகவும், கால்கள் வைக்க விசாலமான வசதியும் உள்ளது.

தனி அறைகள்

பிசினஸ் வகுப்பில் இருக்கைகள் தட்டையாக இருக்கிறது. முதல் வகுப்பில் தனி அறைகள், குளியல் அறைகள் போன்ற வசதிகள் உள்ளன. அந்த விமானம் தினமும் துபாயில் இருந்து 21.25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 9.25) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு பெங்களூரு வந்தடையும்.

மீண்டும் அதே நாள் அதிகாலையில் 4.30 மணிக்கு அந்த விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு அந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி காலை 7.10 மணிக்கு துபாய் சென்றடையும்.


Next Story