மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் ஆஜராக சம்மன்!
பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷன் ஆஜராக டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து விசாரணையை தொடங்கிய டெல்லி போலீசார், பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக கடந்த மாதம் 15ந்தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரஜ் பூஷன் மற்றும் வினோத் தோமர் ஆகியோர் ஜூலை 18ம் தேதி ஆஜராகுமாறு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் அளித்த பாலியல் புகாரில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணைக்காக ஜூலை 18ல் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், நேரில் ஆஜராக பூஷனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரிஜ் பூஷன் சரண் சிங் கூறுகையில், ஜூலை 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுவேன். நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.