நீங்கள் எல்லாம் அடிமைகள்... பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - இஸ்லாமிய மாணவர்களை பார்த்து கூறிய ஆசிரியை பணியிட மாற்றம்
கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவர்களை நீங்கள் எல்லாம் இந்தியாவின் அடிமைகள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறிய ஆசிரியை, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் 5-ம் வகுப்பு இஸ்லாமிய மாணவர்களை நீங்கள் எல்லாம் இந்தியாவின் அடிமைகள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறிய ஆசிரியை, பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
ஷிமோகா நகரின் அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு உருது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை மஞ்சுளா. இவர் கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு இஸ்லாமிய மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளார். அப்போது மாணவர்கள் குறும்பு செய்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்த ஆசிரியை மஞ்சுளா, இஸ்லாமிய மாணவர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் இந்தியாவின் அடிமைகள், வேண்டுமானால் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. ஆசிரியை திட்டியது தொடர்பாக மாணவர்கள், பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விஷயம் பூதாகரமாக வெடித்தது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இதையடுத்து, சிமோகா மாவட்ட கல்வித்துறை, ஆசிரியை மஞ்சுளாவை பணியிட மாற்றம் செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.