அந்தமான் சிறையை பார்த்து வீரசாவர்க்கரின் வரலாற்றை அறியலாம்; சித்தராமையாவுக்கு மந்திரி சுனில்குமார் வேண்டுகோள்


அந்தமான் சிறையை பார்த்து வீரசாவர்க்கரின் வரலாற்றை அறியலாம்; சித்தராமையாவுக்கு மந்திரி சுனில்குமார் வேண்டுகோள்
x

அந்தமான் சிறையை பார்த்து வீரசாவர்க்கரின் வரலாற்றை அறியலாம் என்று சித்தராமையாவுக்கு மின்சார மந்திரி சுனில்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:

ஆங்கிலேயர்களின் கொடுமை

சிவமொக்காவில் வீரசாவர்க்கர் படம் வைக்கப்பட்டதால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து கருத்து கூறிய கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, "சிவமொக்காவில் முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படம் வைத்தது ஏன்" என்று கேள்வி எழுப்பினர். இதற்கு சித்தராமையாவை பா.ஜனதா தலைவர்கள் கண்டித்துள்ளனர். குடகு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சித்தராமையா மீது பா.ஜனதாவினர் நேற்று முன்தினம் முட்டை வீசி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார் உடுப்பியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வீரசாவர்க்கர் அந்தமான் சிறையில் தான் இருந்தார். அந்த சிறையை சித்தராமையா நேரில் சென்று பார்த்தால் அவருக்கு கண்ணீர் தான் வரும். அப்போது அவருக்கு, எந்த அளவுக்கு இந்தியர்கள் போராடி இருப்பார்கள், ஆங்கிலேயர்களின் கொடுமை எப்படி இருந்தது என்பது புரியம். இதன் மூலம் அவர் வீரசாவர்க்கரின் வரலாற்றை அறிய முடியும். அந்த சிறையை நேரில் பார்த்த பிறகு வீரசாவர்க்கர் குறித்து சித்தராமையா பேசட்டும். வீரசாவர்க்கர் தேசியவாதத்தின் சின்னம்.

சித்தராமையாவுக்கு பிடிக்காது

நெற்றியில் குங்குமம் வைத்திருப்பவர்களை பார்த்தால் சித்தராமையாவுக்கு பிடிக்காது. முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படம் வைத்தது குறித்து அவர் கேள்வி எழுப்புகிறார். மக்களை பிளவுபடுத்தும் அவரது எண்ணம் மக்களுக்கு தெரியும். அவரது இந்த நிலையை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

மக்களின் உணர்வுகள் வெடிக்கும்போது இத்தகைய போராட்டம் நடக்கிறது. வன்முறையை உள்ளடக்கிய போராட்டத்தை எங்கள் கட்சி எப்போதும் ஆதரிக்காது.

இவ்வாறு சுனில்குமார் கூறினார்.


Next Story