'நீங்கள் இந்தியிலேயே பேசுங்கள்': பாதியிலேயே சென்ற ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த முன்னாள் மந்திரி


நீங்கள் இந்தியிலேயே பேசுங்கள்: பாதியிலேயே சென்ற ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த முன்னாள் மந்திரி
x

நீங்கள் இந்தியிலேயே பேசுங்கள், அவர்களுக்கு புரியும் என கூறி ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த முன்னாள் மந்திரி பாதியிலேயே சென்று விட்டார்.



சூரத்,


இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.

காஷ்மீர் வரை செல்லும் இந்த பயணம் பின்பு கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என தென் மாநிலங்களில் நீடித்து, பின்னர் மராட்டியத்திற்கு சென்றது. இந்த நிலையில், குஜராத்தின் சூரத் நகருக்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.

குஜராத் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்கு சேகரிக்கும் வகையில் அவர் பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் முன்னிலையில் இன்று பேசினார். அவர் கூட்டத்தினரின் முன் பேசும்போது, இந்தியாவின் முதல் உரிமையாளர்கள் என்றால் அவர்கள் ஆதிவாசிகள்தான். ஆனால், அவர்களை பா.ஜ.க.வோ வனவாசிகள் என அழைக்கிறது.

அவர்களிடம் இருந்து, நிலங்களை பறித்து அவற்றை 2 முதல் 3 தொழிலதிபர்களுக்கு பா.ஜ.க. வழங்கி உள்ளது. ஆதிவாசிகள் நகர பகுதிகளில் வசிப்பதற்கோ, அவர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதிலோ பா.ஜ.க.வுக்கு விருப்பம் இல்லை என ராகுல் காந்தி குற்றச்சாட்டாக இன்று கூறினார்.

பழங்குடியினர் நலனுக்காக, அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதற்காக, மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவியில் இருந்த போது கொண்டு வந்த பஞ்சாயத்துகள் (திட்டமிட்ட பகுதிகளுக்கு நீட்டிப்பு) சட்டம், வன உரிமைச்சட்டம், நில உரிமைகள் சட்டம், பஞ்சாயத்து ராஜ் சட்டம் போன்ற சட்டங்களை மோடி அரசு பலவீனப்படுத்துகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வருகிறபோது, இந்த சட்டங்களையெல்லாம் பலப்படுத்துவோம். உங்கள் நலனுக்காக புதிய சட்டங்களை இயற்றுவோம் என்று இதற்கு முன்பு ஜல்கான் ஜமோத் என்ற இடத்தில் பழங்குடி பெண்கள் தொழிலாளர் சம்மேளன நிகழ்ச்சியில் நடந்த மற்றொரு கூட்டத்தில் பேசும்போது ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

குஜராத்தில் பிரதமர் மோடி பேசும்போது குஜராத்தி மொழியில் பேசுவார். இந்த நிலையில், சூரத் நகரில் பேசிய ராகுல் காந்தி இந்தியிலேயே தனது உரையை தொடங்கி, தொடர்ந்து உள்ளார். இதனால், மக்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக அவரின் பேச்சை முன்னாள் குஜராத் மந்திரியான பாரத் சின்ஹா சொலான்கி என்பவரை வைத்து மொழிபெயர்த்து பேசும்படி கூறி உள்ளனர். இதன்படி, ராகுல் காந்தியின் பேச்சை சொலான்கி மொழிபெயர்த்து உள்ளார்.

இந்நிலையில், அவர் பாதியிலேயே ராகுல் காந்தியிடம், நீங்கள் இந்தியிலேயே பேசினாலும் சரி. உங்களது இந்தியை அவர்கள் (மக்கள்) புரிந்து கொள்வார்கள் என கூறி விட்டு தனது இருக்கைக்கு திரும்ப முயன்றுள்ளார். இதற்கு ராகுல் காந்தி, நீங்கள் மொழிபெயர்ப்பு செய்ய விரும்பவில்லையா...? என கேட்டு விட்டு சரி என கூறி விட்டார்.

ஆனால், மேடையில் இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சொலான்கியை தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபடும்படி சைகை காட்டியுள்ளனர். இதனால், சொலான்கி குழம்பி போயுள்ளார். இருக்கைக்கும், மைக்கிற்கும் இடையே அலைந்து, குழப்பத்தில் தவித்துள்ளார். இந்த காட்சியானது, காங்கிரஸ் சார்பில் வெளியான வீடியோவில் இடம் பெற்றுள்ளது.


Next Story