நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; பஞ்சாப் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்


நெருப்புடன் விளையாடுகிறீர்கள்;  பஞ்சாப் கவர்னருக்கு   சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
x

சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? என பஞ்சாப் கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது.

புதுடெல்லி,

தமிழ்நாடு, பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கவர்னருக்கும் ஆளும் அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல், அதை கிடப்பில் போடுவதாக மேற்கூறிய மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. கவர்னரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராக தமிழ்நாடு, பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளன.

இந்த நிலையில், இன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது, பஞ்சாப் மாநில கவர்னருக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதாக்களின் போக்கை தயவு செய்து மாற்ற வேண்டாம். இந்த விவகாரம் கவலைக்குரியது. நீங்கள் (கவர்னர் ) நெருப்புடன் விளையாடுகிறீர்கள். பஞ்சாப்பில் நடைபெறுவது எங்களுக்கு கவலை அளிக்கிறது. சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படி சரியாகும்? " என காட்டமாக கேள்வி எழுப்பினார்.


Next Story