எம்.எல்.ஏ. பதவியில் இருந்து கே.கே.சைலஜா விலககோரி எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரசார் பேரணி


எம்.எல்.ஏ. பதவியில் இருந்து கே.கே.சைலஜா விலககோரி எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரசார் பேரணி
x

முன்னாள் சுகாதாரத்துறை மந்திரி எம்.எல்.ஏ. பதவியை கே.கே.சைலஜா ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரசார் பேரணி நடத்தினர்.

பெரும்பாவூர்,

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி ஆட்சி நடைபெற்றது. இவரது மந்திரி சபையில் கடந்த 2020-ம் ஆண்டு சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் கே.கே.சைலஜா. இவர் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்த நிலையில் கொரோனா பரவலின்போது மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்புக்காக முழு உடல் பாதுகாப்பு கவச உடை(பி.பி.இ. கிட்) கேரள அரசு சார்பில் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் விலை தலா ரூ.1,500 என்றும், ஆனால் தலா ரூ.15 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்து ஊழல் செய்துள்ளதாகவும் அப்போதைய சுகாதாரத்துறை மந்திரி கே.கே.சைலஜா மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் அந்த மோசடிக்கு பொறுப்பேற்று கே.கே.சைலஜா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எர்ணாகுளத்தில் இளைஞர் காங்கிரசார் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். இதற்கு இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டிட்டோ ஆன்டனி தலைமை தாங்கினார். பேரணியை ஹைபி ஈடன் எம்.பி. தொடங்கி வைத்தார். முன்னதாக அங்குள்ள இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கியது. அதில் கலந்துகொண்ட ஒரு பகுதியினர் முழு உடல் பாதுகாப்பு கவச உடை அணிந்திருந்தனர்.

கனையனூர் தாலுகா அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற அவர்களை மகாராஜா கல்லூரி முன்பு தடுப்புகள் வைத்து போலீசார் தடுத்தனர். உடனே சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.


Next Story