இன்ஸ்டா ரீல்ஸ் மோகம்: நண்பர்கள் கண்முன்னே பாறையில் இருந்து வழுக்கி அருவியில் இழுத்து செல்லப்பட்ட இளைஞர் - வீடியோ
பாறையில் இருந்து வழுக்கி விழுந்த சரத்குமார் நண்பர்கள் கண்முன்னே அருவி நீரில் இழுத்து செல்லப்பட்டார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிவ்மோகா மாவட்டம் பஹத்ராவதி பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 23). இவர் தனது நண்பர்கள் சிலருடன் சிவ்மோகாவின் பெண்டூர் தாலுகா அர்சினங்குடி பகுதியில் உள்ள அருவியை பார்வையிட சென்றுள்ளார்.
கனமழை காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டிய நிலையில் பாறைகள் நிறைந்த பகுதி அருகே சென்று சரத்குமாரும் அவரது நண்பர்களும் அருவியை கண்டு களித்துள்ளனர்.
அப்போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்சில் அருவிக்கு அருகே இன்று வீடியோ பதிவிடவேண்டுமென எண்ணிய சரத்குமார் அருவிக்கு மிக அருகே சென்று அங்குள்ள பாறையில் நின்றுள்ளார். பின்னர் தனது நண்பர்களை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து, நண்பர்கள் வீடியோ எடுக்க சரத்குமார் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி வெள்ளம் அருகே சென்றுள்ளார். அருவி அருகே இருந்த பாறையின் மீது ஏறிய சரத்குமார் அங்கிருந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை அவரது நண்பர்கள் வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய சரத்குமார் பாறையில் இருந்து வழுக்கி தண்ணீரில் விழுந்தார். அருவில் வெள்ளம் அதிக அளவில் இருந்ததால் பாறையில் இருந்து வழுக்கி விழுந்த சரத்குமார் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவாகியுள்ளது.
சரத்குமார் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்ட நிலையில் நண்பர்கள் செய்வதறியாது கூச்சலிட்டுள்ளனர். பின்னர், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் அருவி நீரில் அடித்துச்செல்லப்பட்ட சரத்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். அருவி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட சரத்குமார் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.