உறவுகளை கொச்சைப்படுத்தும் ஆபாச வீடியோக்கள்: யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன்


உறவுகளை கொச்சைப்படுத்தும் ஆபாச வீடியோக்கள்: யூடியூப் இந்தியா அதிகாரிக்கு சம்மன்
x

யூடியூப் தளத்தில் அவ்வப்போது சில ‘சேலஞ்ச்’ வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிவிடுவது வழக்கம்.

புதுடெல்லி,

குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR), தாய் மற்றும் மகன் உறவை கொச்சைப்படுத்தும் அநாகரீகமான வீடியோக்களை அனுமதித்த விவகாரம் தொடர்பாக, யூடியூப் (YouTube) இந்தியாவின் அரசாங்க விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதன்படி அவர் வரும் 15-ம் தேதியன்று ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக யூடியூப் இந்தியாவின் துறை தலைவர் மீரா சாட் என்பவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், "யூடியூப் சேனலில் சமீபகாலமாக பரவிவரும் தாய் - மகன் உறவைக் கொச்சைப்படுத்தும் செயல்கள் கொண்ட வீடியோக்கள் கண்டிக்கத்தக்கவை. சமூகத்தில் இவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீடியோக்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை தேவையாக உள்ளது. தாய் - மகன் 'சேலஞ்ச்' வீடியோக்கள் என்ற பெயரில் டிரெண்டாகும் இந்த வீடியோக்களை தடை செய்வது அவசியம்.

இந்த வீடியோக்கள் 2012 போக்சோ சட்டத்துக்கு எதிரானவை. யூடியூப் நிறுவனம் உடனடியாக இதற்குத் தீர்வு காண வேண்டும். குற்றவாளிகள் சிறை செல்ல நேரிடும். குழந்தைகளை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கி சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடும் நபர்கள் சிறையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.சட்டப்பூர்வ காரணமின்றி இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறினால், சிவில் நடைமுறைச் சட்டம், 1908ன் ஆணை XVI இன் விதி 10 மற்றும் விதி 12 இல் வழங்கப்பட்டுள்ளபடி, நீங்கள் வராததன் விளைவுகளுக்கு நீங்கள் உட்படுத்தப்படுவீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story