கர்நாடகத்தில் புதிதாக 100 கிராம கோர்ட்டுகள்: சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் பேட்டி


கர்நாடகத்தில் புதிதாக 100 கிராம கோர்ட்டுகள்: சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் பேட்டி
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:46 PM GMT)

கர்நாடகத்தில் 100 கிராம கோர்ட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் கூறினார்.

பெங்களூரு-

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூருவில் நேற்று விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளுக்கு தேவையான அளவுக்கு உரம் இருப்பு வைக்க கர்நாடக கூட்டுறவு விற்பனை வாரியத்திற்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக விதைகள் கழக நிறுவனம் ரூ.200 கோடி கடன் வாங்க அரசு உத்தரவாதம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 11 போலீஸ் பயிற்சி பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 100 கிராம கோர்ட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.25 கோடி செலவாகும். கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் பாலின சிறுபான்மையினர் அதாவது திருநங்கைகளுக்கும் விஸ்தரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள்தொகை 30 ஆயிரத்திற்கு கீழ் உள்ள நகரங்களில் ரூ.400 கோடியில் 110 மனித கழிவுகளை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்படும்.

மனித கழிவுகளை சேகரித்து எடுத்து செல்லும் 161 'செப்டிக் டேங்க்' லாரிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 தாலுகாக்களில் வறட்சி இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதற்கு மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இவ்வாறு எச்.கே.பட்டீல் கூறினார்.


Next Story