தனியார் சொகுசு பஸ்களில் 2 மடங்கு கட்டணம் உயர்வு-பொதுமக்கள் அதிர்ச்சி


தனியார் சொகுசு பஸ்களில் 2 மடங்கு கட்டணம் உயர்வு-பொதுமக்கள் அதிர்ச்சி
x

விநாயகர் சதுர்த்தியையொட்டி சொந்த ஊருக்கு ஏராளமானோர் புறப்பட்டு வருகிறார்கள். இதனால் பெங்களூருவில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல தனியார் சொகுசு பஸ்களில் 2 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெங்களூரு:

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கர்நாடகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் அதாவது 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக பெங்களூருவில் வசித்து வரும் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

ஏற்கனவே ரெயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. அரசு பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் மக்களின் வசதிக்காக பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி. சார்பில் 500 சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பஸ்களும் முன்பதிவு ெசய்யப்பட்டு விட்டது.

2 மடங்கு கட்டணம் உயர்வு

இதன்காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் தனியார் சொகுசு பஸ்களை நாடி வருகிறார்கள். இதன்காரணமாக தனியார் சொகுசு பஸ்களின் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வழக்கமான கட்டணத்தில் இருந்து 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் பெரும்பாலான மக்கள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணத்தை கொடுத்து தனியார் சொகுசு பஸ்களில் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு செல்கிறார்கள்.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிக கட்டணம் கொடுத்து சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். உதாரணமாக பெங்களூருவில் இருந்து சென்னைக்கு சாதாரண நாட்களில் தனியார் சொகுசு பஸ்களில் ரூ.650 முதல் ரூ.800 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது அந்த கட்டணம் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

தனியார் பஸ்களின் இந்த கட்டண கொள்ளைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் கூட்டநெரிசலை பயன்படுத்தி தனியார் பஸ் உரிமையாளர்கள் தாறுமாறாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதாகவும், இதற்கு கடிவாளம் போட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டண உயர்வு விவரம் பின்வருமாறு:-

இடம் சாதாரண நாட்களில் (ரூபாயில்) உயர்த்தப்பட்ட கட்டணம் (ரூபாயில்)

பெங்களூரு-பெலகாவி 750-850 1,500-2,000

பெங்களூரு-உப்பள்ளி 500-750 1,300-2,000

பெங்களூரு-சிவமொக்கா 400-700 900-1,400

பெங்களூரு-மங்களூரு 650-850 1,100-1,600

பெங்களூரு-தாவணகெரே 400-600 900-1,200

பெங்களூரு-ஒசப்பேட்டே 500-750 1,000-1,400

பெங்களூரு-பீதர் 650-900 1,200-1,800

பெங்களூரு-மும்பை 1,100-1,300 1,500-3,000

பெங்களூரு-புனே 800-1,200 1,600-2,500

பெங்களூரு-சென்னை 650-800 1,200-1,500

பெங்களூரு-ஐதராபாத் 750-1,000 1,400-1,700


Next Story