இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்


இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவுக்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு-கலெக்டர் தகவல்
x

இந்த ஆண்டுமைசூரு தசரா விழாவுக்கு ரூ. 30 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கலெக்டர் தகவல்.

மைசூரு:-

மைசூரு தசரா விழா

மைசூருவில் ஆண்டுதோறும் உலகப்பிரசித்தி பெற்ற தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் குவிவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்காக ஏற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகிறது. தற்போது இருந்தே மைசூரு அரண்மனை வளாகம் மற்றும் டவுன் பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் மின் விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது. இந்தநிலையில் இந்த ஆண்டு மைசூரு தசரா விழா ரூ. 30 கோடியில் கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து, அரண்மனை வளாகத்தில் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டு தசரா விழா ஆடம்பரம் இல்லாமல் ரூ. 30 கோடி செலவில் கொண்டாடப்படுகிறது. அதாவது கன்னட கலாசாரத்துறை சார்பில் ரூ. 15 கோடி, மூடா சார்பில் ரூ. 10 கோடி, அரண்மனை மண்டலி சார்பில் ரூ. 5 கோடி, விளம்பரதாரர்கள் சார்பில் ரூ. 5 கோடி என மொத்தம் ரூ. 30 கோடி செலவில் தசரா விழா கொண்டாடப்படுகிறது.

நிகழ்ச்சிகள் குறைப்பு

செலவை குறைக்கும் வகையில் தசரா நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் இளைஞர் தசரா 4 நாட்கள் மட்டுமே நடக்கிறது. அதாவது வருகிற 18-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 4 நாட்கள் மட்டுமே தசரா விழா நடக்கிறது. மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை விழா மைசூரு மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

22, 23-ந்தேதி ஆகிய 2 நாட்கள் பன்னி மண்டபம் தசரா தீ பந்து விளையாட்டு மைதானத்தில் 'ஏர் ஷோ' நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு விமான படை தளத்தில் இருந்து போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் கொண்டு வரப்படுகிறது. அன்று சாகச காட்சி நடைபெறும். 23-ந் தேதி தசரா தீ பந்து விளையாட்டு மைதானத்தில் ஜம்பு சவாரி ஊர்வலத்தன்று நடைபெற இருக்கும் கடைசி நிகழ்வான போலீஸ் காரர்களின் சாகச தீப்பந்து விளையாட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இலவசமாக காணலாம்

இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக காணலாம். இந்த ஆண்டு 30 அலங்கார அணி வகுப்பு வாகனங்கள், மத்திய மற்றும் மாநில அரசர்களுக்கு சொந்தமான அரசின் சாதனைகள் அணிவகுப்பு வாகனங்கள் பங்கேற்க உள்ளது. இந்த ஆண்டு தசரா விழாவை முன்னிட்டு கலாசார நிகழ்ச்சிகள் ஜெகன்மோகன அரண்மனை, கர்நாடக கலா மந்திர, கான பாரதி, நாத பிரம்மா சங்கீத சபா, சின்ன மணி தூண் வளாகம், சாமுண்டி மலை கோவில் வளாகம், நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் வளாகங்களில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தசரா விழாவிற்கான அழைப்பிதழை வெளியிட்டார். அப்போது அவருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர், மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ், அரண்மனை மண்டலி இயக்குனர் உள்பட பலர் இருந்தனர்.


Next Story
  • chat