கோலார் அருகே வேன் மோதி 6 ஆடுகள் செத்தன

கோலார் அருகே வேன் மோதி 6 ஆடுகள் உயிரிழந்த நிலையில் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோலார் தங்கவயல்:
விவசாயி
கோலார் தாலுகா ஷெட்டிமாதமங்களா கிராமத்தை சேர்ந்தவர் ஆஞ்சனப்பா. விவசாயியான இவர் 18 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று தனக்கு சொந்தமான 18 ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். மேய்ச்சல் முடிந்ததும் மாலை 4 மணி அளவில் ஆடுகளை வீட்டுக்கு ஓட்டி வந்தார். ஷெட்டிமாதமங்களா கேட் அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஒரு வேன் ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே செத்தன. 10 ஆடுகள் படுகாயம் அடைந்தன. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காயம் அடைந்த ஆடுகளை ஆட்டோக்களில் ஏற்றி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆடுகள் மீது மோதிவிட்டு வேன் நிற்காமல் சென்றுவிட்டது. இதுபற்றி கோலார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் வேன் டிரைவரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கோரிக்கை
இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வந்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயி ஆஞ்சனப்பாவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என்றும், விபத்துக்கு காரணமான வேன் டிரைவரை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற போலீசார் இதுபற்றி பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர்.






