பணம் பறிக்க பள்ளி மாணவனை கடத்த முயற்சி; ஆட்டோ டிரைவர், தோழி கைது


பணம் பறிக்க பள்ளி மாணவனை கடத்த முயற்சி; ஆட்டோ டிரைவர், தோழி கைது
x

பெங்களூருவில் பணம் பறிக்க பள்ளி மாணவனை கடத்த முயன்ற ஆட்டோ டிரைவர், அவரது தோழியை போலீசார் கைது செய்து உள்ளனர்.

பெங்களூரு:

கடத்த முயற்சி

பெங்களூரு ஆவலஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் மனோஜ்குமார். இவரது மகன் சாய் அக்‌ஷித் (வயது 6). இவன் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி பள்ளி முடிந்ததும் சாய் அக்‌ஷித் வேனில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தான். இந்த சந்தர்ப்பத்தில் வேனை வழிமறித்த ஒரு பெண், வேன் டிரைவர் பாஷாவிடம் எனது குழந்தையையும் தினமும் பள்ளி வேனில் அழைத்து வர வேண்டும் என்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது வேனுக்குள் இருந்த சாய் அக்‌ஷித்தை இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சேர்ந்து கடத்த முயன்றனர். இதனால் அதிா்ச்சி அடைந்த வேன் டிரைவர் பாஷா கூச்சலிட்டார். இதையடுத்து இளம்பெண்ணும், வாலிபரும் காரில் தப்பி சென்று விட்டனர். இதன்பின்னர் சாய் அக்‌ஷித்தை டிரைவர் பாஷா வீட்டில் பத்திரமாக இறக்கி விட்டார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து சாய் அக்‌ஷித்தின் பெற்றோரிடம் பாஷா கூறினார்.

ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

இந்த நிலையில் சாய் அக்‌ஷித்தின் தாயை தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், உனது மகனை நாங்கள் தான் கடத்த முயன்றோம். இப்போது தப்பி விட்டான். ஆனால் அவனை கண்டிப்பாக கடத்துவோம். அவனை கடத்தாமல் இருக்க ரூ.5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து ஆவலஹள்ளி போலீசில் மனோஜ் குமார் புகார் அளித்தார். இந்த நிலையில் மனோஜ்குமாரின் மனைவியை மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர், உங்களுக்கும், எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை.

உங்கள் மகனை கடத்த எங்களிடம் சிலர் கூறியுள்ளனர். அவர்களின் பெயரை கூற ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று கேட்டு உள்ளனர். இதுபற்றியும் மனோஜ்குமார் போலீசாரிடம் கூறி இருந்தார். இதையடுத்து போலீசாரின் அறிவுரையின்பேரில் மனோஜ்குமார், மர்மநபர்களிடம் பணம் கொடுக்க சம்மதித்தார்.

பணம் பறிக்க திட்டம்

இந்த நிலையில், கே.ஆர்.புரம் ரெயில் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வைத்து மர்மநபரை சந்தித்து மனோஜ்குமார் ரூ.2 லட்சத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் மர்மநபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் கே.ஆர்.புரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சக்திவேல் (வயது 20) என்பது தெரியவந்தது. இவர் தனது தோழியான சுனிதா (30) என்பவருடன் சேர்ந்து சாய் அக்‌ஷித்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

கைதான சக்திவேல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை மனோஜ்குமார் வீட்டில் வேலை செய்து வந்து உள்ளார். பின்னர் வேலையை விட்டு நின்ற சக்திவேல், மனோஜ்குமாரிடம் அதிக பணம் இருப்பது பற்றி அறிந்ததும் அவரது மகனை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டதும் தெரியவந்து உள்ளது. கைதான சக்திவேல், சுனிதா மீது ஆவலஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.


Next Story