கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜனதா முக்கிய ஆலோசனை; மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெற வாய்ப்பு


கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜனதா முக்கிய ஆலோசனை; மந்திரிசபை விரிவாக்கம் விரைவில் நடைபெற வாய்ப்பு
x

கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து பா.ஜனதா முக்கிய ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இதில் கட்சியின் முக்கிய தலைவர்களான அருண்சிங், எடியூரப்பா, பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெங்களூரு:

விரிவாக ஆலோசனை

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு(2023) தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளன. அதனால் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. இந்த நிலையில் ஆளும் பா.ஜனதா முக்கியமான ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டம் பெங்களூரு அருகே தேவனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் நடந்தது. கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் மூத்த தலைவர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது, அதில் வெற்றி பெற அமைக்க வேண்டிய வியூகம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பா.ஜனதா அரசு மீது மக்களிடையே சற்று அதிருப்தி நிலவுகிறது. இந்த அதிருப்தியை எவ்வாறு போக்குவது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ள மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் வழங்காமல் புதிய முகங்களை தேர்தலில் நிறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தொண்டர்களின் குறைகள்

இதுகுறித்து அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், அதற்காக கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கட்சிக்கும், ஆட்சிக்கும் இடையே ஒருங்கிணைப்பை பலப்படுத்துவதன் மூலம் அரசின் திட்டங்களில் கட்சியினர் பங்கேற்று அதன் மூலம் அதை மக்களுக்கு கொண்டு செல்ல முடியும். இதுபற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிட உள்ளனர். அடிமட்ட அளவில் அவர்களுடன் இணைந்து பணியாற்றும்படியும் அறிவுரை வழங்கப்பட இருக்கிறது' என்றார்.

மந்திரிசபை விரிவாக்கம்

கர்நாடக மந்திரிசபையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்கள் நீண்ட காலமாக காலியாகவே இருக்கின்றன. அதை நிரப்ப வேண்டும் என்று மூத்த எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பா.ஜனதா மேலிடம் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் அந்த எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால் விரைவில் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story