தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது: வரலாற்று சின்னங்கள் நீரில் மூழ்கின

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 1¼ லட்சம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இதனால் வரலாற்று நினைவு சின்னங்கள் நீரில் மூழ்கின.
பெங்களூரு:
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி போன்ற அணைகள் நிரம்பிவிட்டன.
அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் காவிரி ஆற்றின் படுகையில் அமைந்து கிராமங்களில் வெள்ளம் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
1¼ லட்சம் கனஅடி தண்ணீர்
தொடர் கனமழை காரணமாக மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் கபிலா ஆற்றின் குறுக்கே உள்ள கபினி அணைக்கும், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரியின் குறுக்கே உள்ள கே.ஆர்.எஸ். அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் நேற்று 123.55 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 91,637 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,00,569 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் 2,283.04 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 24,095 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் மொத்தம் வினாடிக்கு 1,25,569 கனஅடி தண்ணீர் திருமக்கூடலு சங்கமம் வழியாக அகண்ட காவிரியாக தமிழகம் செல்கிறது.
துங்கபத்ரா அணை
இந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழையால் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள துங்கபத்ரா அணை நிரம்பியுள்ளது. அந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 1,633 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது அந்த அணையில் 1,631 அடி தண்ணீர் உள்ளது. இதையடுத்து அந்த அணைக்கு வரும் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அந்த அணையின் 33 மதகுகள் திறக்கப்பட்டு ஒரு லட்சம் கனஅடி நீர் துங்கபத்ரா ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இதனால் அந்த ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரலாற்று நினைவு சின்னங்கள்
துங்கபத்ரா அதிக நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஹம்பியில் உள்ள வரலாற்று சின்னங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோல், கே.ஆர்.எஸ். அணையில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள வரலாற்று சின்னங்களும், மண்டபங்களும் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கூறும்போது, "கட்டபிரபா, மல்லப்பிரபா, கிருஷ்ணா, காவிரி, சுபா, வராகி மற்றும் அதன் துணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகளில் நீர் நிரம்பியுள்ளன. கடலோர பகுதிகளில் உள்ள அணைகளும் நிரம்பி வழிகின்றன" என்றனர். பெங்களூருவில் நேற்று கனமழை பெய்தது. இதனால் சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் பரிதவித்தனர்.
இன்றும் கனமழை பெய்யும்-வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், "வங்க கடலில் வடமேற்கு பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் உடுப்பி, குடகு, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. கடலோர மாவட்டங்களில் இன்றும் (திங்கட்கிழமை) கனமழை பெய்யும். சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். பீதர், கலபுரகி, விஜயாப்புரா, கலபுரகி, யாதகிரி, பாகல்கோட்டை, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்றனர்.






