அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க முடிவு?


அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை நியமிக்க முடிவு?
x

கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதால் மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

முதல்-மந்திரி பதவிக்கு போட்டி

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு(2023) சட்டசபை தேர்தல் நடைடெபற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவிக்கு மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி

பரமேஸ்வர், மாநில தேர்தல் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவும் கர்நாடக முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்துள்ளார்.

ஏற்கனவே முதல்-மந்திரி பதவிக்காக டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் மோதிக் கொள்வதால், சமீபத்தில் அவர்கள் 2 பேரையும் டெல்லிக்கு அழைத்து ராகுல்காந்தி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். சித்தராமையா ஏற்கனவே 5 ஆண்டுகள் முதல்-மந்திரியாக பதவி வகித்து இருந்தாலும், அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார்.

ராகுல்காந்தி சமாதான பேச்சு

அதே நேரத்தில் மாநில தலைவராக இருக்கும் டி.கே.சிவக்குமார், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கவும், ஆட்சியை பிடிக்கவும் இரவு, பகலாக உழைத்து வருகிறார். இவர்களுக்கு மத்தியில் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவும் முதல்-மநதிரி ஆக விரும்புவதால், காங்கிரஸ் மேலிட தலைவர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன், கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தின் போது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு காங்கிரசில் முக்கிய பதவி வழங்க இருப்பதாகவும், அவர் தேசிய அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், அதனால் கர்நாடக அரசியலில் ஈடுபட மாட்டார் என்றும் ராகுல்காந்தி கூறியதாக கூறப்படுகிறது.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு தலைவர்...

இதன் காரணமாக டி.கே.சிவக்குமாரும், சித்தராமையாவும் சற்று நிம்மதி அடைந்திருந்தனர். அதே நேரத்தில் முதல்-மந்திரி பதவி மீது கண் வைத்துள்ள மல்லிகார்ஜுன கார்கேவை ஓரங்கட்ட காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. தலித் சமுதாயத்தின் மூத்த தலைவர்களில் அவர் முக்கியமானவர் என்பதால், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் அவருக்கு முக்கிய பதவி வழங்கி, அவரை சமாதானப்படுத்தவும், அவருக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்யவும் சோனியா காந்தி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தி மறுத்து வருவதால், மல்லிகார்ஜுன கார்கேவை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


Next Story