கொள்ளேகால் நகரசபை தேர்தல்: கட்சி மாறி வாக்களித்த 7 பேரின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி


கொள்ளேகால் நகரசபை தேர்தல்:  கட்சி மாறி வாக்களித்த 7 பேரின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி
x

கொள்ளேகால் நகரசபை தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த உறுப்பினர்கள் 7 பேரின் மேல் முறையீட்டு மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கொள்ளேகால்:

கொள்ளேகால் நகரசபை தேர்தல்

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் நகரசபை தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்தல் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி நடந்தது. இதில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் சார்பில் நேரடி போட்டி நிலவியது. இதில் வெற்றி பெற பா.ஜனதாவிற்கு கூடுதலாக 7 உறுப்பினர்கள் தேவைப்பட்டது. இதற்காக பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த மகேஷ் எம்.எல்.ஏ.வின் ஆதரவை பா.ஜனதா நாடியது.

7 பேர் பதவி நீக்கம்

இதை ஏற்ற அவர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பவித்ரா, கங்கம்மா, நாகமணி, நாகசுந்தரம்மா, பிரகாஷ், ராமகிருஷ்ணா, நசீர் செரீப் ஆகிய 7 நகரசபை உறுப்பினர்களை, பா.ஜனதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி செய்தார். இதையறிந்த பகுஜன் சமாஜ் கட்சி மேலிடம் அதிருப்தி அடைந்தது.

இதையடுத்து 7 உறுப்பினர்களின் செயல்பாடுகளை கண்டித்தது அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கட்சி சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மேல்முறையீடு மனு தள்ளுபடி

இதை ஏற்ற அப்போதைய கலெக்டர் ரவி, 7 பேரையும் உறுப்பினர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 7 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை கடந்த 2 ஆண்டாக நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி இவ்விவகாரத்தில் 7 பேரின் தகுதி நீக்கம் உத்தரவு செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து 7 பேர் தரப்பிலும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, கலெக்டர் உத்தரவில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்றும், அதனால் தகுதி நீக்கம் செல்லும் என்று கூறி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story