டிரைவர் தற்கொலை

மனைவியும், மாமியாரும் திட்டியதால் சாவுக்கான காரணம் குறித்து முகநூலில் வீடியோ வெளியிட்டு விட்டு டிரைவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிக்பள்ளாப்பூர்:
மனைவியும், மாமியாரும் திட்டியதால் சாவுக்கான காரணம் குறித்து முகநூலில் வீடியோ வெளியிட்டு விட்டு டிரைவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டிரைவர்
சிக்பள்ளாப்பூர்(மாவட்டம்) டவுன் பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். டிரைவர். இவருக்கும், கவுரிபித்தனூரை சேர்ந்த ஷில்பா என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு வெங்கடேஷ் தனது மனைவி, மகன்கள் மற்றும் தன்னுடைய தாயுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்துவது தொடர்பாக ஷில்பாவுக்கும், அவரது மாமியாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் தனது முதல் மகனை பள்ளி விடுதியில் சேர்த்துவிட்டு, 2-வது மகனுடன் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கவுரிபித்தனூருக்கு சென்ற வெங்கடேஷ், அங்கு தனது மனைவி ஷில்பாவை சந்தித்து தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். அப்போது அவரை அவரது மனைவி ஷில்பா, மாமியார் அஸ்வதம்மா, ஷில்பாவின் அண்ணன் ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி திருப்பி அனுப்பினர்.
இதனால் மனமுடைந்த வெங்கடேஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் தனது செல்போனில் தனது சாவுக்கு காரணம் குறித்து செல்பி வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம், முகநூல்(பேஸ்புக்) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கடேசின் தாய் மஞ்சுளா சிக்பள்ளாப்பூர் டவுனில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






