காங்கிரஸ் தலைவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை- காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜ் குற்றச்சாட்டு


காங்கிரஸ் தலைவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை-  காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜ் குற்றச்சாட்டு
x

விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் காங்கிரஸ் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டுயுள்ளார்.

கோலார் தங்கவயல்:

நாடு முழுவதும் போராட்டம்

நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டதாக கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட பலரை போலீசார் கைது செய்து, பின்னர், விடுவித்தனர்.

இந்த நிலையில் கோலாரில் நேற்று காங்கிரஸ் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுதான் பா.ஜனதாவின் சாதனை. இதற்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் போராட்டங்கள் நடத்தினர்.

பொய் வழக்கு

இதற்கு பழிவாங்கும் நோக்கில், பா.ஜனதா அரசு காங்கிரஸ் தலைவர்கள் மீது பொய் வழக்கு தொடர்ந்து, அமலாக்கத்துறை மூலம் இடையூறு செய்து வருகிறது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். பா.ஜனதா அரசு நாட்டு மக்களை அழிக்க நினைக்கிறது. அதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிட திட்டமிடுகிறது.

இந்த கொடூர ஆட்சியை ஒழிக்க மக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். அனைவரும் மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த போராட்டத்தின் இறுதியில் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் வெங்கட ராஜாவிடம் கொடுத்தனர்.


Next Story