தசரா விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்


தசரா விழாவில் கலந்து கொள்ள வரும்  பொதுமக்களுக்கு  போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

தசரா விழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

மைசூரு

மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் தசரா கமிட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இதில், மாநகர போலீஸ் கமிஷனர் ரமேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீமா லட்கர், அரண்மனை மண்டலி இயக்குனர் சுப்பிரமணியா, மாநகராட்சி கமிஷனர் ரகுமான், மாவட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி காயத்ரி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர பிரசாத் பேசுகையில், தசரா விழா வருகிற 15-ந்தேதி(நாளை) தொடங்குகிறது. தசரா விழாவை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள். போலீசார் தசரா நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்த கூடாது. கடமை பற்றியும், மக்களின் பாதுகாப்பு பற்றியும் கவனம் செலுத்தவேண்டும்.

பொதுமக்கள் தசரா நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வீடுகள் பாதுகாப்பாக உள்ளதா என உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.

வாகனங்களில் செல்லும்போது வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். திருட்டு, கொள்ளை மற்றும் விபத்து போன்ற அசம்பாவித சம்வங்கள் நடக்கக்கூடாது. அந்த மாதிரி சம்பவங்கள் நடக்காத வண்ணம் போலீசார் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தீயணைப்பு வீரர்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பட்டாசு உள்ளிட்ட வெடிப் பொருட்களை வைத்திருப்பவர்களை தசரா விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க கூடாது.

போலீசார் 24 மணி நேரமும் சோதனை, கண்காணிப்பு பணியில் இருக்க வேண்டும். தூய்மை பணிகள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். மின்சார அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மின்சார அலங்கார விளக்குகள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.மின்விளக்கு அலங்காரம் பொதுமக்கள் மனம் கவரும் வகையில் இருப்பதால் சாலைகளை அழகுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story