200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஓட்டல் உரிமையாளர் சாவு


200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஓட்டல் உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 26 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 6:46 PM GMT)

மூடிகெரே அருகே 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஓட்டல் உரிமையாளர் பலியானார்.

சிக்கமகளூரு-

மூடிகெரே அருகே 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஓட்டல் உரிமையாளர் பலியானார்.

ஓட்டல் உரிமையாளர்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சென்னாபுரா கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் அஞ்சன் (வயது38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அஞ்சன் சென்னாபுரா கிராமத்தில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் ஓட்டலுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க சரக்கு வாகனத்தில் கலசாவிற்கு அஞ்சன் சென்றார். பின்னர் காய்கறிகளை வாங்கி கொண்டு சென்னாபுராவிற்கு அவர் வந்தார்.

இதையடுத்து ஓட்டலில் வைத்து கடையில் வாங்கிய பொருட்கள் சரியாக உள்ளதா என சோதனை செய்தார். அப்போது ஒரு சில காய்கறி, மளிகை பொருட்கள் காணவில்லை. இதுகுறித்து கடைக்காரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதில் அவர் பொருட்கள் உள்ளன என தெரிவித்தார்.

காரில் சென்றார்

இதையடுத்து காய்கறி, மளிகை பொருட்களை வாங்குவதற்கு காரில் அஞ்சன் கலசாவிற்கு சென்றார். கார் அப்பரகொடிகே என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். பின்னர் அவர்கள் பாலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு மூடிகெரே தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் 200 அடி பள்ளத்தில் கயிறு கட்டி இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒரு புதருக்குள் அஞ்சன் படுகாயங்களுடன் பிணமாக கிடந்தார். அவரின் உடலை போலீசார் கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மூடிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இதையடுத்து காரை பொக்லைன், கிரேன் எந்திரம் உதவியுடன் 200 அடி பள்ளத்தில் இருந்து போலீசார் மீட்டனர். இந்த விபத்து குறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story