சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்


சட்டவிரோதமாக  குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Oct 2023 6:30 PM GMT (Updated: 11 Oct 2023 6:30 PM GMT)

சிக்கமகளூரு அருகே சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு அருகே சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 3 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் வெளிமாநிலங்களில் இருந்து பட்டாசுகள் லாரி, சரக்கு வாகனங்களில் கர்நாடகத்திற்கு கொண்டு வரப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சிவகாசியில் இருந்து சரக்கு வாகனங்களில் பட்டாசுகள் ஏற்றி கொண்டு பெங்களூரு புறநகர் மாவட்டம் அத்திப்பள்ளிக்கு வந்தது. அப்போது அந்த வாகனங்களில் தீப்பிடித்து எரிந்தது.

இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பட்டாசுகள் நாலாபுறமும் சிதறி வெடித்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதையடுத்து 6 தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு சரக்கு வாகனங்களில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த தீவிபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டாசு வெடிக்க தடை

இந்தநிலையில், வெடி விபத்தில் 14 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து திருமணம், அரசியல் கட்சி விழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வெடிக்க கர்நாடக அரசு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா ஆலேனஹள்ளி கிராமத்ைத சேர்ந்தவர் ஹேமந்த். இவருக்கு சொந்தமான பட்டாசு குடோன் அப்பகுதியில் உள்ளது.

இந்தநிலையில் இவர் அனுமதியின்றி பட்டாசுகளை குடோனில் பதுக்கி வைத்திருப்பதாக பசவனஹள்ளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது குடோனில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் இருந்தன. ஆனால், அதற்கான ேஹமந்த் முறையான உரிமம் பெறவில்லை.

வழக்குப்பதிவு

இதையடுத்து பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் ஹேமந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story