கர்நாடகத்தில் பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ஆதரவு திரட்டினார்


கர்நாடகத்தில்  பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ஆதரவு திரட்டினார்
x

கர்நாடகத்தில் பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ஆதரவு திரட்டினார். அவர் தேவேகவுடாவை சந்தித்து பேசினார். ஜனதாதளம்(எஸ்) கட்சி அவருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

திரவுபதி முர்முவுக்கு வரவேற்பு

ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு நேற்று அவர் பெங்களூருவுக்கு வருகை தந்தார். அதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவதற்காக பெங்களூருவுக்கு திரவுபதி முர்மு வருகை தந்திருந்தார்.

பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்திறங்கிய திரவுபதி முர்முவை, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் வரவேற்றனர். பின்னர் அவர், பெங்களூருவில் ஒரு ஓட்டலில் நடந்த கூட்டத்திற்கு சென்றார். அங்கு வைத்து பா.ஜனதாவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சுமலதா எம்.பி. ஆதரவு

அத்துடன் 200 ஆதிவாசிகள் நடனமாட திரவுபதி முர்முவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் 2,500 பெண்களும் கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்கள். அதன்பிறகு ஓட்டலில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பா.ஜனதா எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களிடம் திரவுபதி முர்மு கேட்டார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் திரவுபதி முர்முவுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

அதே நேரத்தில் பா.ஜனதாவினர் ஏற்பாடு செய்திருந்த ஓட்டலுக்கு சுயேச்சை எம்.பி.யான சுமலதாவும் வருகை வந்தார். பின்னர் சுமலதாவை சந்தித்து திரவுபதி முர்மு பேசினார். அப்போது தனக்கு ஆதரவு அளிக்கும்படி சுமலதாவிடம் திரவுபதி முர்மு கேட்டார். சுமலதா எம்.பி.யும் ஜனாதிபதி தோதலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

தேவேகவுடாவுடன் சந்திப்பு

அதைத்தொடர்ந்து, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடாவின் வீட்டுக்கு திரவுபதி முர்மு புறப்பட்டு சென்றார். அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்ளிட்டோரும் சென்றார்கள். பின்னர் தேவேகவுடாவை சந்தித்து திரவுபதி முர்மு ஆலோசனை நடத்தினார். அப்போது முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியும் உடன் இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று தேவேகவுடாவிடம் திரவுபதி முர்மு கேட்டார்.

அப்போது ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆதரவு அளிக்கும் என்று திரவுபதி முர்முவிடம் தேவேகவுடா தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து திரவுபதி முர்மு புறப்பட்டு வந்தார்.


Next Story