பிரவீன் நெட்டார் படுகொலை: கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் தொடர் ராஜினாமா


பிரவீன் நெட்டார் படுகொலை:  கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் தொடர் ராஜினாமா
x

பிரவீன் நெட்டார் படுகொலை எதிரொலியாக கர்நாடகத்தில் பா.ஜனதாவினர் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகிறார்கள்.

பெங்களூரு:

பிரவீன் நெட்டார் கொலை

தட்சிணகன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா நெட்டார் கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி பிரமுகரான பிரவீன் நெட்டாரை கடந்த 26-ந்தேதி இரவு மர்மநபர்கள் வெட்டிக்கொன்றனர். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மர்மநபர்களை உடனே கைது செய்ய கோரியும், நீதிகேட்டும் நேற்று முன்தினம் பிரவீனின் இறுதி ஊர்வலத்தின் போது நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

கர்நாடகத்தில் இந்து பிரமுகர்கள் அடிக்கடி கொலை செய்யப்பட்டு வருவதாகவும், ஆனால் ஆளுங்கட்சியான பா.ஜனதா அரசே இதுபோன்ற கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

தொடர் ராஜினாமா

மேலும் இந்த கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உடுப்பி, தட்சிணகன்னடா மாவட்டங்களை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி நிர்வாகிகள்,

பா.ஜனதா நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருகிறார்கள். அதுபோல் துமகூரு மாவட்டம் துருவக்கெரே நகர பா.ஜனதா தலைவர் நவீன் பாபு என்பவர் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 20 ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருப்பதாக தனது

சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். ஏற்கனவே துமகூரு மாவட்ட சமூகவலைத்தளப்பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் உடுப்பி மாவட்டம் பைலகெரே வார்டு பா.ஜனதா உறுப்பினர்களான விஜயபிரகாஷ், சரத்குமார், அருண் ஜடன், சதீஷ் ஆர்.பூஜாரி, விகிதா சுரேஷ், மஞ்சுநாத், பிரசாத் ஆகிய 7 பேர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக மாவட்ட பா.ஜனதா தலைவர் கொய்லாடி சுரேஷ் நாயக்கிற்கு ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். இதேபோல், மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதியில் பா.ஜனதா இளைஞர் அணியினர்

15 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.


Next Story