ஆயுத பூஜையையொட்டி பூக்கள்-பழங்கள் விலை உயர்வு


ஆயுத பூஜையையொட்டி பூக்கள்-பழங்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

ஆயுத பூஜையையொட்டி பெங்களூருவில் பூக்கள்-பழங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன.

பெங்களூரு:-

கடுமையாக உயர்வு

ஆயுத பூஜை இன்றும் (திங்கட்கிழமை), விஜயதசமி நாளையும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்களின் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபடுவார்கள். வீடுகளிலும் சிறப்பு பூஜைகளை செய்வார்கள். இந்த பூஜையில் முக்கியமாக பூக்கள், பழங்கள் இடம் பெறுகின்றன. அதனால் அவற்றின் விலை பெங்களூரு மார்க்கெட்டுகளில் கடுமையாக உயர்ந்துள்ளன. அதாவது மல்லிகை பூ கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.1,600 ஆகவும், கனகாம்பரம் ரூ.400-ல் இருந்து ரூ.1,200 ஆகவும், ரோஜா ரூ.150-ல் இருந்து ரூ.300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. திராட்சை கிலோ ரூ.200-ல் இருந்து ரூ.240 ஆகவும், ஆப்பிள் ரூ.100-ல் இருந்து ரூ.120 ஆகவும், மாதுளை ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆகவும், சீத்தாப்பழம் ரூ.80-ல் இருந்து ரூ.160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டம் அலைமோதியது

பட்டாணி விலை கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.160 ஆகவும், பீன்ஸ் ரூ.60-ல் இருந்து ரூ.80 ஆகவும், முள்ளங்கி ரூ.50-ல் இருந்து ரூ.80 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும், இஞ்சி ரூ.120-ல் இருந்து ரூ.200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள், பழங்களின் விலை உயர்ந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பூஜைகள் செய்வதற்கான பொருட்களை வாங்க சிட்டி மார்க்கெட், கோரமங்களா மார்க்கெட், யஷ்வந்தபுரம் மார்க்கெட், பசவனகுடி மார்க்கெட்டுகளில் குவிந்திருந்தனர். அங்கு தங்களுக்கு பூக்கள், பழங்கள், காய்கறிகளை வாங்கி சென்றனர். குறிப்பாக சிட்டி மார்க்கெட்டில் மக்களின் கூட்டம் அலைமோதியது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க மார்க்கெட்டுகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மார்க்கெட் பகுதிகளில் வாகன நெரிசல் உண்டானது. அதை சரிசெய்யும் பொருட்டு போக்கு வரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story