தனியார் ஆஸ்பத்திரி ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி; தம்பதி மீது போலீசார் வழக்கு


தனியார் ஆஸ்பத்திரி ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி; தம்பதி மீது போலீசார் வழக்கு
x

ஆய்வகத்தில் முதலீடு செய்யும்படி கூறி தனியார் ஆஸ்பத்திரி ஊழியரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு பனசங்கரி அருகே கொடிசிக்கனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 38). தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியரான இவருக்கு தனது நண்பரான அருண்குமார் என்பவர் மூலம் சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி சகானா ஆகியோரின் பழக்கம் கிடைத்து இருந்தது. சதீசிடம், சஞ்சீவ் குமாரும், அவரது மனைவி சகானாவும் தாங்கள் ஆய்வகம் நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் கொரோனா பரிசோதனைகளை செய்ய தனது ஆய்வகம் அரசுடன் ஒப்பந்தம் செய்து இருப்பதாகவும், இதன்மூலம் தனக்கு அரசிடம் இருந்து நல்ல வருமானம் கிடைப்பதாகவும், அதில் முதலீடு செய்யும்படியும் கூறியுள்ளார்.

இதனை நம்பிய சதீஷ் தனது உறவினர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் வரை கடன் வாங்கி சஞ்சீவ், சகானா நடத்தி வரும் ஆய்வகத்தில் முதலீடு செய்து இருந்தார். ஆனால் கூறியபடி சதீசுக்கு, சஞ்சீவ் மற்றும் சகானா பணம் கொடுக்கவில்லை. இதுபற்றி கேட்ட போது அவர்கள் சரியான பதிலும் சொல்லவில்லை. அப்போது தான் தன்னை ஏமாற்றி ரூ.35 லட்சத்தை மோசடி செய்தது சதீசுக்கு தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் பனசங்கரி போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதேபோல் அவர்கள் பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது.


Next Story