மேகதாது அணைகட்ட கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்க இடங்கள் தேர்வு

மேகதாது அணைகட்டும் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாற்றாக, இழப்பீடு வழங்க 4 மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு, அக்.11-
பெங்களூரு விதானசவுதாவில் நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
4 மாவட்டங்களில் இடங்கள்
கர்நாடக நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து வனத்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. பெங்களூரு திப்ப கொண்டனஹள்ளி ஏரியை சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக அறிவித்திருப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. அங்கு வனத்துறைக்கு சம்பந்தப்பட்ட பகுதிகள் அதிகம் உள்ளது. அதன் பரப்பளவை குறைக்க கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் மேகதாதுவில் அணைகட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. வருவாய்த்துறை மற்றும் வனத்துறையிடம் இருந்து 5,240 ஹெக்டேர் நிலத்தை கர்நாடக அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேகதாது அணைகட்டும் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மாற்றாக இழப்பீடு வழங்க 4 மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அணைகட்ட நடவடிக்கை
பெங்களூரு, மண்டியா, ராம்நகர், சாம்ராஜ்நகர் ஆகிய 4 மாவட்டங்களில் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டவர்களுக்கு, எவ்வளவு இடங்கள் வழங்க வேண்டும் என்ற பட்டியலும் தயாரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
வனத்துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் மேகதாது அணை அமையும் பகுதியில் வெட்டப்படும் மரங்கள், இயற்கை வளங்கள், வனவிலங்குகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை திரட்டி உள்ளனர்.
மேகதாது அணைகட்டும் விவகாரத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை வனத்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே உடன் இருந்தார்.






