மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா


மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

குடகு மாவட்டம் மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா பங்கேற்றார்.

குடகு-

குடகு மாவட்டம் மடிகேரியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வெங்கடராஜா பங்கேற்றார்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

கர்நாடகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ந் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி ஆகஸ்டு மாதம் இறுதி வரை பெய்யும். இதுதான் தென்மேற்கு பருவமழை காலம் ஆகும்.அதுபோல் பருவமழை காலத்தில் மழை சேதங்கள், மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு படையினர் கர்நாடகத்திற்கு வருவார்கள். அவர்கள் மழையால் அதிக சேதங்களை சந்திக்கும் குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு போன்ற மாவட்டங்களில் முகாமிட்டு மழைக்காலங்களில் மீட்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

அதுபோல் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை காலத்தையொட்டி மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கர்நாடகத்துக்கு வந்தனர். அவர்களில் ஒரு பிரிவினர் குடகு மாவட்டத்தில் முகாமிட்டு இருந்தனர். ஆனால் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இருப்பினும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குடகு மாவட்டத்திலேயே இருந்து வந்தனர்.

பிரியாவிடை

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவடைந்ததை அடுத்து நேற்று மடிகேரி டவுனில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருக்கு வழியனுப்பு விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வெங்கட ராஜா கலந்து கொண்டு தேசிய பேரிடர் மீட்பு குழுவின் தலைமை அதிகாரி சாந்திலால் ஜாட்டியாவுக்கு மைசூரு தலைப்பாகை மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் அவர்பேசும்போது கூறியதாவது:-

குடகு மாவட்டத்தில் கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 10-வது பட்டாலியனை சேர்ந்தவர்கள் பெரும் சேவையை செய்தனர். இந்த ஆண்டு குடகில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. இருப்பினும் பேரிடர் மீட்பு குழுவினர் மடிகேரியிலேயே முகாமிட்டு சேவையாற்றினர். அவர்களது சேவை மகத்தானது. தற்போது அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்து வழியனுப்பி வைத்தோம்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடராஜா கூறினார்.


Next Story