ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா நிறைவு


ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா நிறைவு
x

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா நிறைவடைந்துள்ளது.

மண்டியா:

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா நிறைவடைந்துள்ளது.

ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா

கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா உலக புகழ்பெற்றதாகும். கர்நாடகத்தில் மைசூருவுக்கு அடுத்தப்படியாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் தசரா விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பு யது மன்னர்கள் காலத்தில் தசரா விழா ஸ்ரீரங்கப்பட்டணாவை தலைமையிடமாக கொண்டு கொண்டாடப்பட்டு வந்தது. அதன்பிறகு உடையார் மன்னர்கள் காலத்திற்கு பிறகு தசரா விழா மைசூருவை தலைமையிடமாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனாலும் ஸ்ரீரங்கப்பட்டணாவில் 3 நாட்கள் தசரா விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி தசரா விழா ஜம்புசவாரி ஊர்வலத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

நிறைவு விழா

இதையடுத்து ஸ்ரீரங்கப்பட்டணாவில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. இந்த நிலையில் ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா நிறைவு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ஸ்ரீரங்கப்பட்டணா டவுன் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதேஸ்வரா கோவிலில் நிறைவு நாள் விழா நடந்தது. இந்த விழாவில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், விவசாயத்துறை மந்திரியுமான செலுவராயசாமி, வருவாய் துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா உள்பட பலர் கலந்துகொண்டனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகள், யோகா நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீரங்கப்பட்டணா தசரா விழா கோலாகலமாக நடந்து முடிந்தது.

கலாசாரம், பாரம்பரியம்

இந்த நிறைவுநாள் நிகழ்ச்சியில் மந்திரி கிருஷ்ண பைரேகவுடா பேசுகையில், தசரா விழா நாடு முழுவதும் பல்வேறு விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகத்தில் கொண்டாடப்படும் மைசூரு தசரா விழா உலக பிரசித்தி பெற்றதாகும். கலை, பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நமது கலை, கலாசாரம், மொழி, பாரம்பரியம், வரலாறு காக்கப்பட வேண்டும் என்றால் தசரா போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். இந்த ஆண்டு வறட்சியால் மைசூரு தசரா விழா எளிமையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மந்திரி செலுவராயசாமி பேசுகையில், ஸ்ரீரங்கப்பட்டணாவில் 3 நாட்கள் தசரா விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்காக உழைத்த மாவட்ட அதிகாரிகள், ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. மழையின்மை, காவிரி நதிநீர் பிரச்சினை என எத்தனையோ கஷ்டங்கள் வந்தாலும் பாரம்பரிய விழாவான தசரா விழாவை நிறுத்தக்கூடாது என்றார்.


Next Story