கர்நாடக காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை: மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார்


கர்நாடக காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை:  மந்திரி ஆர்.அசோக் சொல்கிறார்
x

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இல்லை என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறியுள்ளார்.

பெங்களூரு:

வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உதவி செய்கிறோம்

முதல்-மந்திரி பதவி விஷயத்தில் காங்கிரசில் நிலவும் மோதல் தெருவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. அக்கட்சியின் மாநில தலைவருக்கு சவால் விடுக்கிறார். அவரது பின்னால் பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். அதனால் தான் அவர் அவ்வாறு பேசுகிறார். காங்கிரஸ் கட்சியின் மோதலால் அது இன்னொரு கட்சிக்கு ஆதாயம் அளிக்கும்.

இந்த மோதலை கவனிக்கும்போது காங்கிரசில் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. கொரோனா காலத்தில் ஆகட்டும், வெள்ளம் ஏற்பட்டபோதும் காங்கிரசார் யாரும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை, எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்கிறோம். அந்த மக்களுக்கு நிவாரணத்தை இரண்டு மடங்காக அதிகரித்து வழங்கினோம்.

வெற்றி பெற முடியாது

சாதிகள் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகிறார்கள். சாதிக்கு மதிப்பு இல்லையா?.கெம்பேகவுடா, குவெம்பு ஆகியோர் எப்போதும் சாதி அடிப்படையில் செயல்பட்டது இல்லை. கெம்பேகவுடா அனைத்து சாதியினருக்கும் தனித்தனியாக நகர பகுதியை அமைத்து கொடுத்தார்.

மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் முதல்-மந்திரி ஆக முடியும். சாதிக்கு ஒருவர் முதல்-மந்திரி ஆக முடியாது. காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் வருகிற சட்டசபை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெற முடியாது.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.


Next Story