ஹேமாவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி வெளியேற்றம்

தொடர் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஹேமாவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஹாசன்:
ஹாசனில் தொடர் கனமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதேபோல் மலைநாடு மாவட்டமான ஹாசனிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த நிலையில் நேற்று சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
மேலும் ஹாசனில் உள்ள ஏரிகள், குளங்களும் நிரம்பி வந்தன. இதேபோல், கெரூர் பகுதியில் உள்ள ஹேமாவதி அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தண்ணீர் திறப்பு
கடல் மட்டத்தில் இருந்து 2,922 அடி கொள்ளளவு கொண்ட ஹேமாவதி அணையில் நேற்று 2,918.52 அடி தண்ணீர் உள்ளது. அணை நிரம்ப இன்னும் 3½ அடியே பாக்கி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15,723 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹேமாவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோரத்தில் உள்ள மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.






