டி.கே.சிவக்குமாருடன், முனிரத்னா எம்.எல்.ஏ. சந்திப்பு


டி.கே.சிவக்குமாருடன், முனிரத்னா எம்.எல்.ஏ. சந்திப்பு
x

தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை திரும்ப பெற்ற விவகாரம் தொடர்பாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்தித்து முனிரத்னா எம்.எல்.ஏ. பேசினார். காங்கிரசில் சேர அவர் அழைப்பு விடுக்கவில்லை என்று முனிரத்னா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

காலில் விழுந்து ஆசீர்வாதம்

பெங்களூரு ஆர்.ஆர்.நகர்(ராஜராஜேஸ்வரிநகர்) தொகுதிக்கு ஒதுக்கிய ரூ.126 கோடி நிதியை திரும்ப பெற்றதால், அந்த தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ.வான முனிரத்னா விதானசவுதாவில் உள்ள காநதி சிலை முன்பாக நேற்று காலையில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் தர்ணாவை கைவிட்டு விட்டு, அரண்மனை மைதானத்தில் இருந்த துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை சந்திக்க முனிரத்னா சென்றார்.

அங்கு முதலில் டி.கே.சிவக்குமாரை அவரால் சந்திக்க முடியாமல் போனது. ஆனாலும் சிறிது நேரத்தில் டி.கே.சிவக்குமாரை முனிரத்னா நேரில் சந்தித்து பேசினார். அப்போது டி.கே.சிவக்குமாரின் காலில் முனிரத்னா விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றார். மேலும் தொகுதிக்கு வழங்கிய நிதியை திரும்ப பெற்ற விவகாரம் தொடர்பாக டி.கே.சிவக்குமாரிடம் கோரிக்கை மனுவையும் அவர் கொடுத்தார்.

டி.கே.சிவக்குமாருடன் சந்திப்பு

உடனே முனிரத்னாவின் தோளில் தட்டி கொடுத்த டி.கே.சிவக்குமார், மனுவை பெற்றுக் கொண்டார். மேலும் தன்னை வீட்டில் வந்து சந்திக்கும்படி கூறி முனிரத்னாவை டி.கே.சிவக்குமார் அனுப்பி வைத்தார். அதன்படி, சதாசிவநகரில் உள்ள வீட்டுக்கு சென்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரை, முனிரத்னா எம்.எல்.ஏ. சந்தித்து பேசினார்.

அப்போது தொகுதிக்கு ஒதுக்கிய நிதியை திரும்ப பெற்றிருப்பதால், எந்த வளர்ச்சி பணியும் மேற்கொள்ள முடியாது, எனவே அந்த நிதியை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமாரிடம், முனிரத்னா வலியுறுத்தினார்.

காங்கிரசில் சேர அழைப்பு...

பின்னர் முனிரத்னா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், என்னுடைய தொகுதிக்கு வழங்கிய நிதியை கொடுக்கும்படி கோரிக்கை வைத்தேன். அந்த பிரச்சினையை சரி செய்வதாக உறுதி அளித்துள்ளார். என்னுடைய தொகுதி வளர்ச்சியும், மக்களுமே முக்கியம். அதற்காக தான் போராடி வருகிறேன். இந்த சந்திப்பின் போது காங்கிரசில் சேரும்படி டி.கே.சிவக்குமார் எந்த அழைப்பும் விடுக்கவில்லை. நானும் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர மாட்டேன், என்றார்.

இதுகுறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறுகையில், முனிரத்னா ஒரு சினிமா தயாரிப்பாளர். அவருக்கு நடிப்பு பற்றி தெரியும். அரண்மனை மைதானத்திற்கு வந்து சந்தித்தார். வீட்டுக்கு வரும்படி கூறினேன். வீட்டுக்கு வந்து தொகுதிக்கு நிதி அளிக்கும் விவகாரம் பற்றி பேசிவிட்டு சென்றுள்ளார், என்றார்.


Next Story