விபத்து நடந்த போது 100 கி.மீ. வேகத்தில் வந்த சைரஸ் மிஸ்திரி கார்- விசாரணையில் தகவல்


விபத்து நடந்த போது 100 கி.மீ. வேகத்தில் வந்த சைரஸ் மிஸ்திரி கார்- விசாரணையில் தகவல்
x

விபத்து நடந்த போது டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் கார் 100 கி.மீ. வேகத்தில் வந்தது தெரியவந்து உள்ளது.

மும்பை,

விபத்து நடந்த போது டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் கார் 100 கி.மீ. வேகத்தில் வந்தது தெரியவந்து உள்ளது.

100 கி.மீ. வேகத்தில் கார்

டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த வாரம் நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு காரில் வந்தார். இதில் பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி விபத்தில் சிக்கியது. விபத்தில் சைரஸ் மிஸ்திரி, அவரது நண்பர் ஜகாங்கிர் பலியானார்கள்.

இந்தநிலையில் விபத்தில் சிக்கிய மெர்சிடஸ்-பென்ஸ் காரை அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் விபத்து தொடர்பாக முதல்கட்ட அறிக்கையை பால்கர் போலீசில் சமர்பித்து உள்ளனர். அதில் விபத்து நடந்த போது கார் 100 கி.மீ. வேகத்தில் வந்ததாக கூறப்பட்டுள்ளது.

5 வினாடிக்கு முன் போடப்பட்ட பிரேக்

இதுகுறித்து பால்கர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாசாகிப் பாட்டீல் கூறியதாவது:-

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் அளித்து உள்ள முதல் கட்ட அறிக்கையில், விபத்து நடப்பதற்கு சில வினாடிக்கு முன் கார் 100 கி.மீ. வேகத்தில் வந்ததாக கூறப்பட்டுள்ளது. விபத்து நடப்பதற்கு 5 வினாடிக்கு முன் காரின் பிரேக் போடப்பட்டுள்ளது. இதையடுத்து கார் 89 கி.மீ. வேகத்தில் தடுப்பு சுவரில் மோதி உள்ளது. இதேபோல விபத்து தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகம் தாக்கல் செய்த அறிக்கையில் தடுப்பு சுவரில் மோதிய பிறகு தான் காரில் 4 ஏர் பேக்குகள் திறந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய காரை ஆய்வு செய்ய ஹாங்காங்கில் இருந்து மெர்சிடஸ்-பென்ஸ் நிறுவன வல்லுநர்கள் வர உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story