மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு


மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவு நாளை வெளியீடு
x

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

12-ம் வகுப்பு தேர்வு

மராட்டியத்தில் கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறவில்லை. ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் மாநிலத்தில் எச்.எஸ்.சி. எனப்படும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பொது தேர்வு நடந்தது.

இந்த தேர்வுக்கு 14 லட்சத்து 85 ஆயிரத்து 191 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 188 பேர் மாணவர்கள். 6 லட்சத்து 68 ஆயிரத்து 3 பேர் மாணவிகள். கொரோனா பரவல் காரணமாக கூடுதல் தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன.

நாளை தேர்வு முடிவு

இந்தநிலையில் நாளை (புதன்கிழமை) 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இதுகுறித்த தகவலை மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் டுவிட்டரில் அறிவித்தார். அதில் அவர், 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று மதியம் 1 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார். மேலும் அவர் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளை கூறினார்.

மாணவர்கள் mahresult.nic.in, hscresult.mkcl.org, hsc.mahresults.org.in ஆகிய இணைதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.

மறுகூட்டலுக்கு விண்ணப்பம்

இதில் மாணவர்கள் 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 20-ந் தேதி வரை மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். 10-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மாணவர்கள் விடைத்தாள் நகல் (போட்டோ காப்பி) கேட்டு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விடைத்தாள் நகல் பெற்று இருப்பது கட்டாயமாகும்.

மேலும் விடைத்தாள் நகல் பெற்ற 5 வேலை நாளில் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ந் தேதி பிற்பகல் 3 மணி முதல் அவர்களின் பள்ளி, ஜூனியர் கல்லூரிகளில் வழங்கப்பட உள்ளது.


Next Story